அதிமுகவில் வெடித்தது பூகம்பம்: சி.வி. சண்முகம் தலைமையில் 1,300 பேர் கூண்டோடு ராஜினாமா!
AIADMK CV Shanmugam MLA Resign: அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் எம். எல். ஏ. தலைமையிலான 1,300-க்கும் அதிகமான அந்தக் கட்சியினர் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் அளித்தனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்எல்ஏவுமான சி.வி. சண்முகம் தலைமையிலான சுமார் 1,300- க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று திங்கள்கிழமை (ஜூலை 20- ஆம் தேதி) எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, அவர் இல்லாத காரணத்தால் அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அதிமுகவில் சி.வி. சண்முகத்துக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்காததை கண்டித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான பிரிவினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இதில், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக சி.வி. சண்முகம் தரப்பினரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதிமுகவில் இணைந்தவர்களுக்கு மீண்டும் பதவி
பின்னர், எஸ். பி. வேலுமணி தலையிலான பிரிவினர், எடப்பாடி பழனிசாமி உடன் சமூக பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவில் மீண்டும் இணைந்து செயல்பட தொடங்கினர். ஆனால், சி.வி. சண்முகம் தலைமையிலான தரப்பினர் சமூக போக்கை முன்னெடுக்காமல் இருந்தனர். அத்துடன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் அதிமுகவில் கட்சி பதவிகள் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக எஸ். பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அதிமுக துணை பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கி இருந்தார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. திமுக எம்எல்ஏ அதிரடி கைது!!
சி.வி. சண்முகம் தரப்புக்கு பதவி வழங்கவில்லை
ஆனால், சி.வி. சண்முகம் மற்றும் அவரது தரப்பினருக்கு கட்சி பதவி வழங்கப்படவில்லை. இதனால், சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில், தங்களது கட்சி பதவிகளை ராஜினாமா செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, சென்னையில் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா நினைவிடத்தில் தங்களது ராஜினாமா கடிதங்களை வைத்து வணங்கி விட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்து கட்சியிலிருந்து விலகி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம்
இதில், திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 18-க்கும் மேற்பட்ட ஒன்றிய செயலாளர்கள், மாநில, மாவட்ட மற்றும் நகர அளவிலான உள்ளிட்ட பல நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். முன்னதாக அவர்கள் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதிமுகவை அழிக்காதே, ஏன் இந்த பிடிவாதம்? உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியதால் மெரினா பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: “நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”.. திமுக எம்.எல்.ஏ கைதுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கடும் கண்டனம்!!

