AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”.. திமுக எம்.எல்.ஏ கைதுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கடும் கண்டனம்!!

Stalin and Kanimozhi Slam TVK Govt: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவெக அரசு அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல் துறையை ஏவி திமுகவினரை வேட்டையாடுவதாக அவர்கள் சாடியுள்ளனர்.

“நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”.. திமுக எம்.எல்.ஏ கைதுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கடும் கண்டனம்!!
மு.க.ஸ்டாலின், கனிமொழி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Jul 2026 13:32 PM IST

சென்னை, ஜூலை 20: தமிழக முதலமைச்சரும், தவெக தலைவரும் ஜோசப் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) அதிகாலை காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் தவெக அரசுக்குத் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க: “தளபதி விஜய் சும்மா விடமாட்டார்!”.. ஊழல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஆனந்தின் பரபர பேச்சு!

எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது பின்னணி:

கடந்த ஜூலை 18 அன்று கோவில்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான மற்றும் அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களை முன்வைத்ததாகக் கூறி, தவெக கட்சியின் நிர்வாகி ஒருவர் காவல் துறையில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் மீது வழக்குப் பதிவு செய்து, இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன், சபாநாயகரின் அனுமதி இன்றி ஒரு தற்போதைய சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்யக் கூடாது என்று மார்க்கண்டேயன் போலீசாரிடம் வாதிட்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக கடந்த ஜூலை 3-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தவெக தலைவருக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது கைதாகும் இரண்டாவது திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆவார்.

“நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”

எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ள விதம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மிகக் காரசாரமான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், “ஜனநாயக பண்புகள் அறவே இன்றி தவெக அரசு செயல்பட்டு வருகிறது. தவெக ஆட்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் காட்டுமிராண்டித்தனமாகக் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள். ஆட்சியில் நடைபெறக்கூடிய தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டினால், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் இந்த அரசு தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தற்போதைய தவெக அரசு என்பது ஒரு ‘டேக் டைவர்ஷன்’ மாடல் அரசாக உள்ளது.”

அடிப்படை உரிமைகள் மறுப்பு:

“கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞரையோ அல்லது ஆதரவாளர்களையோ சந்திக்கக் கூட காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. அவருக்குத் தேவையான அவசர மருந்துகளை வாங்கச் சென்றவர்களும் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஒருவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும், மனித உரிமைகளும் கூட இந்த ஆட்சியில் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது சாத்தானின் ஆட்சியா?

மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினர்களின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது நடவடிக்கை மேற்கொள்வது ஏன்? ஆட்சியாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல் துறையின் பணி அல்ல. காவல் துறையினர் சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று காவல் துறைக்கு மு.க.ஸ்டாலின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: இந்தியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்த திமுக.. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் இருக்கைகள் அதிரடி மாற்றம்!!

தக்க பாடம் புகட்டப்படும்: எம்.பி கனிமொழி ஆவேசம்

மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்குத் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதியும் தனது எக்ஸ் (X) பக்கத்தில் ஆவேசமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவரது பதிவில், “விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களைக் காட்டுமிராண்டித்தனமான முறையில் கைது செய்துள்ள தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தங்களுக்கு எதிராக வரும் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், திமுகவினரை ஒடுக்குவதற்காகக் காவல் துறையை ஏவிவிடும் தவெக அரசிற்கு, ஜனநாயக வழியில் மிகத் தக்க பாடம் புகட்டப்படும்! கைது செய்யப்பட்டுள்ள மார்க்கண்டேயன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.

Follow Us