முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. திமுக எம்எல்ஏ அதிரடி கைது!!
DMK MLA Markandayan Arrested: தூத்துக்குடி கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து ஒருமையிலும், மிரட்டும் தோனியிலும் அவதூறாகப் பேசிய வழக்கில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, ஜூலை 20: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகவும், மிரட்டும் தோனியிலும் பேசிய விவகாரத்தில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று அதிகாலை காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: “தளபதி விஜய் சும்மா விடமாட்டார்!”.. ஊழல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஆனந்தின் பரபர பேச்சு!
கைதுக்கான பின்னணி என்ன?
இந்த பொதுக்கூட்டத்தில் மேடையில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் வந்த நிகழ்வைக் குறிப்பிட்டுப் பேசுகையில், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், மிரட்டும் தோனியிலும் சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், “ஊழலின் மொத்த உருவம் தமிழகத்தின் முதல்வர்” என்றும் அவர் அந்த மேடையில் விமர்சித்திருந்தார்.
தவெக நிர்வாகிகள் புகார்:
முதலமைச்சர் விஜய் குறித்து திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தவெகவின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மார்க்கண்டேயன் மீது முறைப்படி அவதூறு மற்றும் மிரட்டல் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டிற்கு 50-க்கும் மேற்பட்ட போலீசாருடன் அதிரடியாகச் சென்றனர். அவரிடம் வழக்கு விபரங்களை எடுத்துக் கூறி, அவரை காவல்துறையினர் முறைப்படி கைது செய்தனர்.
வாகனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்:
எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிகாலையில் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து, அவரது வீட்டின் முன்பாக ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். காவல்துறையினர் அவரை வாகனத்தில் ஏற்றி தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவரை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான மற்றும் பரபரப்பான சூழல் நிலவியது. எனினும், காவல்துறையினர் தங்களது உரிய விளக்கங்களை அளித்து, தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி பலவந்தமாக அவரை வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க: கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் வலியுறுத்தல்!
தொடரும் கைது நடவடிக்கை:
முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசு குறித்து அவதூறாகப் பேசும் திமுக முக்கிய நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. ஏற்கனவே கடந்த ஜூன் 20-ஆம் தேதி இதேபோன்று அவதூறாகப் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனும் கைது செய்யப்பட்டிருப்பது தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.