இந்தியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்த திமுக.. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் இருக்கைகள் அதிரடி மாற்றம்!!
DMK Skips INDIA Alliance Meeting: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை திமுக முழுமையாகப் புறக்கணித்துள்ளது. கூட்டணி முறிவைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் அருகே இருந்த திமுக எம்பிக்களின் இருக்கைகள் மாற்றப்பட்டு, சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அருகே ஒதுக்கப்பட்டுள்ளன.
டெல்லி, ஜூலை 20: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தது, நாடாளுமன்ற அவைகளில் எம்பிக்களின் இருக்கைகள் மாற்றப்பட்டது என திமுகவின் அதிரடி அரசியல் நகர்வுகள் தேசிய அளவில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளன. மழைக்கால கூட்டத்தொடரில் நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை எவ்வாறு எழுப்புவது மற்றும் மத்திய அரசின் மசோதாக்களை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதையும் படிக்க: “தளபதி விஜய் சும்மா விடமாட்டார்!”.. ஊழல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஆனந்தின் பரபர பேச்சு!
கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்த திமுக:
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், திமுக எம்பிக்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக திமுக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தை திமுக முழுமையாகப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக எம்பிக்களின் இருக்கைகள் அதிரடி மாற்றம்:
தேர்தல் கூட்டணி முறிவடைந்து, இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தங்களது இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் சபாநாயகரிடம் முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. திமுகவின் கோரிக்கையை ஏற்று அவையின் சபாநாயகர்கள் அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, இதுவரை காங்கிரஸ் எம்பிக்களின் இருக்கைகளுக்கு அருகில் அமர்ந்திருந்த திமுக எம்பிக்களின் இருக்கைகள் தற்பொழுது முழுமையாக மாற்றப்பட்டு, சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களின் இருக்கைகளுக்கு அருகே மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய இருக்கை நடைமுறை இன்றைய கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே அமலுக்கு வந்துள்ளது.
மேகதாது விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தேசிய கீதம் இசைக்கப்பட்டுத் தொடங்கிய உடனே, நீட் மற்றும் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அவையில் கடுமையான கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டன. அதே நேரத்தில், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது அணை விவகாரத்தை கையில் எடுத்து திமுக எம்பிக்கள் அவையில் அதிரடி காட்டினர். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும் பச்சை நிறத் துண்டுகளை அணிந்து டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்பிக்கள் அவைக்கு வருகை தந்தனர்.
இன்றைய அவையின் பிற பணிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு, மேகதாது அணை விவகாரம் குறித்து முழுமையான விவாதம் நடத்தக் கோரி லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் திமுக சார்பில் ‘அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்திற்குச் சபாநாயகர் அனுமதி மறுக்கும் பட்சத்தில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் திமுக எம்பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. திமுக எம்எல்ஏ அதிரடி கைது!!
முதல் நாளிலேயே தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள்
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசின் சார்பில் சுமார் 6 முதல் 9 மசோதாக்கள் வரை தாக்கல் செய்யப்படலாம் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்றைய முதல் நாளிலேயே ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலை இழிவுபடுத்துபவர்களுக்குச் சிறை தண்டனை வழங்கும் திருத்த மசோதா மற்றும் வெளிநாட்டு நன்கொடைகள் தொடர்பான ‘எஃப்சிஆர்ஏ’ திருத்த மசோதா ஆகியவை அலுவல் பட்டியலில் சேர்க்கப்பட்டு விவாதத்திற்கு வரவுள்ளன.