Tamil Nadu By Election 2026 Result: மதுராந்தகம்- தாராபுரம் வாக்கு எண்ணிக்கை.. எத்தனை சுற்றுகள்? முடிவுகள் எப்போது? முழு விவரம்!
Maduranthakam Dharapuram Assembly Constituencies Bypoll 2026 Result: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும் நிலையில் பிற்பகலே முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் களத்தில் முந்தப்போவது யார்.
தமிழகத்தில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், நாளை வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 9- ஆம் தேதி) வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள 4 மாதங்களில் வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அந்த தொகுதி மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் உற்று நோக்கும் இடைத்தேர்தலாக மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. அதன்படி, நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது. மதுராந்தகம் தொகுதியில் செங்கல்பட்டு அருகே உள்ள சமூக மாற்றத்துக்கான பயிற்சி மையத்திலும், தாராபுரம் தொகுதியில் திருப்பூர் எல். ஆர். ஜி. அரசு கலைக் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி
முதலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்கான தேர்தல் முடிவுகள் பிற்பகலுக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் பணிகளுக்காக மதுராந்தகம் தொகுதியிலும் 14 டேபிள்கள் அமைக்கப்பட்டு 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதேபோல, தாராபுரத்தில் 14 டேபிள் அமைக்கப்பட்டு 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழகத்தை போல புதுச்சேரி மாநிலத்திலும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மேலும் படிக்க: “ஜனநாயகக் குரலை நசுக்கும் செயல்!”.. ராகுல் காந்தி கைதை எதிர்த்து தவெக கடும் கண்டனம்!!




புதுச்சேரி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
இதில், தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மோதிலால் நேரு கலைக் கல்லூரில் 4 சுற்றுகளாக எண்ணப்பட்டு காலை 11 மணிக்கு முன்னதாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 85. 99 சதவீதமும், தாராபுரத்தில் 80.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த சட்டமன்ற பொது தேர்தலை விட குறைவான வாக்கு பதிவாகும். இதன் காரணமாக யாருக்கு சாதகமான வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும் என அரசியல் கட்சியினர் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
யாருக்கு கை கொடுக்கும் இடைத்தேர்தல் முடிவுகள்
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுவதால் அதன் முடிவில் முன்னிலை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலை போலவே இடைத்தேர்தலிலும் 5 முனை போட்டி நிலவியது. இதில், மதுராந்தகம் தொகுதியில் வெறும் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக, அதிமுக, திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், தாராபுரத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடவேண்டும் என்று ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் பெரும் முனைப்பு காட்டி உள்ளனர். இருந்தாலும் மக்கள் தீர்ப்பு என்ன என்பது நாளை பிற்பகலுக்குள் தெரியவரும்.
மேலும் படிக்க: தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதம்.. உளவுத்துறை தோல்விக்கு முதல்வர் தான் பொறுப்பு.. நயினார் அதிரடி கருத்து!