வருண பகவானை வளைக்க பிளான்.. இரு தவளைகளுக்கு கலகல திருமணம்.. கோவையில் கிராம மக்கள் வினோதம்!
Kovai Frogs Wedding : கோயம்புத்தூர் மாவட்டத்தில் மழை வேண்டி குரும்பபாளையம் கிராம மக்கள் 2 தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு அசைவ விருந்தும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு பொது மக்கள் மத்தியில் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது .
கோயம்புத்தூர் மாவட்டம், வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் வினோத சடங்குகளை நடத்துவது வழக்கமாகும். அந்த வகையில், தற்போது, போதிய மழைப்பொழிவு இன்று இந்த கிராமத்தில் விவசாயம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பொதுமக்களின் அன்றாட தேவைக்கான குடிநீரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை தீர்ப்பதற்காகவும், மழை வேண்டியும் குரும்பபாளையம் கிராமத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி 2 தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்தனர். அதன்படி, புரட்டாசி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்து அந்த நாளில், ஆண் தவளைக்கும், பெண் தவளைக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக, அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் என 2 தரப்பாக பிரிந்து கொண்டனர்.
இரு தவளைகளுக்கும் சீர் வரிசையுடன் பிரம்மாண்ட ஊர்வலம்
அதன்படி, இரு தவளைகளை பிடித்து திருமண சடங்குக்காக சிறிய மாட்டு வண்டி அலங்காரம் செய்யப்பட்டு அதில் ஆண் மற்றும் பெண் தவளைகளை தனித்தனியாக வைத்து பொதுமக்கள் குடை பிடித்து பிரம்மாண்ட ஊர்வலமாக சென்றனர். அத்துடன் திருமணத்திற்கு தேவையான அனைத்து சீர்வரிசை பொருள்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இரு தவளைகளுக்கும் இந்து முறைப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டு திருமணம் நடைபெற்றது.
மேலும் படிக்க: வெற்றி பயணத்தால் காலியாக ஓடும் பேருந்துகள்.. குடும்பத்தை எப்படி ஓட்டுவது? மனக்குமுறலை கொட்டிய ஓட்டுநர்!




திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு கிடா கறி விருந்து
தொடர்ந்து, சுவாமிக்கும், தவளைகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர், திருமணம் செய்து வைக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் தவளைகளை அந்த பகுதியில் உள்ள தண்ணீர் கிணற்றில் பொதுமக்கள் விட்டனர். அத்துடன், திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு மதிய உணவாக ஊர் மக்கள் சார்பில் மதுரை வீரன் சுவாமிக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பாக ஊர் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் மழை பொழிவு இல்லாத காலத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கம் ஆகும்.
மழை வேண்டி இரு தவளைகளுக்கு திருமணம்
அதன்படி, தற்போது, இரு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து இறைவனை வேண்டினால் நிச்சயம் மழை பொழியும் என்ற நம்பிக்கையில் இந்த பாரம்பரிய வழிபாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதன்படி, தற்போது நடத்தப்பட்ட தவளை திருமணத்தை தொடர்ந்து மழை பொழியும் என நம்புவதாக தெரிவித்தனர். வேடப்பட்டி குரும்பபாளையம் கிராமத்தில் முன்னோர்களின் பாரம்பரிய நம்பிக்கையே பின்பற்றி நடைபெற்ற இந்த தவளை திருமண விழா சுற்று கிராமத்தினர் மத்தியில் வினோதமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: கர்ஜித்த எஞ்சின்கள் முடங்கின.. ரேஸர்களை அலறவிட்ட சென்னை போலீஸ்.. 2 ஆயிரம் பைக்குகள் பறிமுதல்!