கர்ஜித்த எஞ்சின்கள் முடங்கின.. ரேஸர்களை அலறவிட்ட சென்னை போலீஸ்.. 2 ஆயிரம் பைக்குகள் பறிமுதல்!
Bikes Seized In Chennai : சென்னையில் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபட்டதற்காக சுமார் 2 ஆயிரம் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததாகவும், இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து காவல் துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது .
சென்னை மாவட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஜெமினி மற்றும் ஐஐடி மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடந்த அக்டோபர் 3- ஆம் தேதி அன்று சுமார் 20- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிக சத்தம் எழுப்பியவாறு பைக் ரேஸில் ஈடுபட்டனர். இதேபோல, வள்ளுவர் கோட்டம் சிக்னல் அருகே சுமார் 20- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக பைக் சாகசங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த இளைஞர்கள் மீது போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 3 நாட்களில் மட்டும் வாகன சாகசங்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 2 ஆயிரம் பேரின் இருசக்கர வாகனங்களை சென்னை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில், சென்னை முழுவதும் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
2 ஆயிரம் பைக்குகள் பறிமுதல்
அத்துடன் சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் அபாயகரமான வாகன சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த 3 நாட்களாக சென்னை முழுவதும் வாகன சாகசங்களில் ஈடுபட்ட அல்லது பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்ட 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், அபாயகரமான பயணங்களை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருச்சியில் துணிகரம்.. வெளிமாநிலத்திலிருந்து ரூ.25 லட்சம் போதை இலை கடத்தல்.. மாணவர்களுக்கு குறி வைத்த 5 பேர்!




பைக் ரேஸில் ஈடுபட்ட மாணவர் உயிரிழப்பு
முன்னதாக, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸ்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் குகன் ( 21 வயது) என்பவர் ஐ. ஐ. டி. மேம்பாலத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை பின்னால் வந்தவர்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, விபத்து நடந்த பகுதியில் உடன் இருந்தவர்கள் யார்.
விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை
அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். இதில், கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அந்த விபத்து சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தென்காசியில் பிரைவேட் வாட்டர் பால்ஸ் க்ளோஸ்.. சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி.. என்ன காரணம்..!