சீறி வந்த கனரக லாரி.. சக்கரத்தில் சிக்கிய ஸ்கூட்டி.. தாய், 2 மகன்கள் ரத்த வெள்ளத்தில் பலி.. தஞ்சையில் சோகம்!
Thanjavur Accident 3 Killed : தஞ்சாவூர் மாவட்டத்தில் பைக் மீது லாரி மோதிய கொடூர விபத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
தஞ்சாவூர் மாவட்டத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பகுதியில் வசித்து வந்தவர் பெனாசிர் பேகம் ( 26 வயது), இவருக்கு முகமது ஜாவித் ( 12 வயது), முகமது ஜாசித் ( 10 வயது), முகமது ஹாலித் ( 5 வயது) என 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், பெனாசிர் பேகம் தனது 3 மகன்களையும் அழைத்துக்கொண்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். திருவையாறு- தஞ்சாவூர் சாலையில் உள்ள அம்மன் பேட்டை பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக பெனாசிர் பேகம் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பைக் மீது லாரி மோதியதில் கொடூர விபத்து
இந்த விபத்தில், பெனாசிர் பேகம் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினர். உடனே, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக திருவையாறு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 பேரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணை வளையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி.. கிடுக்கிப்பிடி விசாரணை!
தாய், மகன்கள் என 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தாய் பெனாசிர் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது மகன்களான முகமது ஜாசித், முகமது ஹாலித் ஆகியோரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த மற்றொரு மகன் முகமது ஜாவித் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த 3 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சவக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.
நடுகாவேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் நடுகாவேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுனரை பிடித்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக, விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகனங்களின் சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் படிக்க: பயிரை மேய்ந்த வேலி! 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொல்லை.. ஆசிரியர் போக்சோவில் கைது.. ஈரோட்டில் பரபரப்பு!