பயிரை மேய்ந்த வேலி! 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொல்லை.. ஆசிரியர் போக்சோவில் கைது.. ஈரோட்டில் பரபரப்பு!
Erode Teacher Arrested : ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சமூக அறிவியல் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாலையில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், 6- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் சிலருக்கு பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி பிரிவு பகுதியில் வசித்து வரும் விஜய் சாரதி ( 45 வயது) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. வெகு நாட்களாக அந்த மாணவிகளுக்கு ஆசிரியர் விஜய சாரதி பாலியல் தொல்லை அளித்து வந்ததாக தெரிகிறது.
ஆசிரியர் தொல்லை குறித்து தலைமையாசிரியரிடம் புகார்
அந்த மாணவிகளிடம், இது தொடர்பாக யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டி உள்ளார். இதனால் அச்சம் அடைந்த மாணவிகள் இது தொடர்பாக யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். ஆனால், சமூக அறிவியல் ஆசிரியர் விஜய சாரதியின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால், பொறுமை இழந்த மாணவிகள் இந்த பாலியல் சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கமணியிடம் புகார் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியரை தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும் படிக்க: நாகர்கோவில் ரயிலில் பெண் கற்பழித்து கொலை! டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்.. எண்ட்ரி கொடுத்த மகளிர் ஆணையம்!
போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது
இதில், 6- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகளுக்கு ஆசிரியர் விஜய சாரதி பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன், புகார் அளித்த மாணவிகளிடமும் தனித்தனியாக தலைமை ஆசிரியர் தங்கமணி விசாரணை நடத்தி இருந்தார். அத்துடன், ஆசிரியரால் வேறு எந்த மாணவிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் தங்கமணி புகார் அளித்தார்.
சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்
அந்த புகாரின் பேரில், போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று சமூக அறிவியல் ஆசிரியர் விஜய சாரதியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணை வளையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி.. கிடுக்கிப்பிடி விசாரணை!