நாகர்கோவில் ரயிலில் பெண் கற்பழித்து கொலை! டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்.. எண்ட்ரி கொடுத்த மகளிர் ஆணையம்!
Nagercoil Women Murder Ncw Notice : நாகர்கோவிலில் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 நாள்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நாகர்கோவிலில் ரயிலில் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக டிஜிபி அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணைய உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த நவம்பர் 11- ஆம் தேதி பயணிகள் ரயில் ஒன்று வந்து சேர்ந்தது. அந்த ரயிலானது பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக நாகர்கோவில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணிகள் முடிந்த நிலையில் ரயில் பெட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, ரயில் இருக்கைக்கு அடியில் பெண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, ரயில்வே இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கன்னியாகுமரி மாவட்டம், செண்பக ராமன் புதூர் பகுதியை சேர்ந்த ஜான்சன் மகன் ஐயப்பன் ( 31 வயது) அந்தப் பெண்ணை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.
டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை 7 நாள்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுக்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளது. இது போன்ற கொடூர சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்புக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. இந்த கற்பழிப்பு கொலை சம்பவம் தொடர்பாக ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க: நா பெரிய ரவுடி ஆகனும்.. அதுக்கு இதுதான் சரியான சான்ஸ்.. இளைஞரை சுற்றி வளைத்து தூக்கிய சென்னை போலீஸ்!
உடல் அழுகியதால் பெண்ணை அடையாளம் காணுவதில் சிக்கல்
அதில், பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில், குற்றவாளி ஐயப்பன் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அழுகி இருந்ததால் அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், ரயில் நிலைய தண்டவாளத்தில் அவர் நடந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், அவர் முகம் தெளிவாக தெரியவில்லை. இதனால், அவரின் அங்க அடையாளங்கள் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
குற்றவாளி போலீசாரிடம் அளித்த பகீர் வாக்குமூலம்
இந்த சம்பவத்தில், திருமணம் ஆகாத குற்றவாளி ஐயப்பன் இரவு நேரங்களில் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றித் திரிந்து உள்ளார். சம்பவத்தன்று அந்தப் பெண் தனியாக நடந்து சென்றதை பார்த்து அவர் அவரை சரமாரியாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை இருக்கைக்கு அடியில் போட்டுவிட்டு சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: செஞ்சி சிறுமி விவகாரம்.. இரவு முழுவதும் எரிந்த செங்கல் சூளை.. மீண்டும் திரும்பிய சிபிசிஐடி பார்வை!