நா பெரிய ரவுடி ஆகனும்.. அதுக்கு இதுதான் சரியான சான்ஸ்.. இளைஞரை சுற்றி வளைத்து தூக்கிய சென்னை போலீஸ்!
Chennai Crime : சென்னையில் பெரிய ரெளடி ஆக வேண்டும் என்ற ஆசையில் சமூகவலைதளங்களில் பட்டாக் கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை பெருங்களத்தூர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 7 பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் பெரிய ரவுடி ஆவதற்கு ஆசைப்பட்டு சமூக வலைதளங்களில் பட்டா கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர், சீனிவாசன் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு இளைஞர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பட்டா கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது. இதைப் பார்த்த பொதுமக்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த ரீல்ஸ் விவகாரம் பெருங்களத்தூர் போலீசார் கவனத்திற்கு சென்றது. அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், ரீல்ஸ் பதிவிட்ட நபர் திருவள்ளுவர் கருவில் வசித்து வரும் ஆதித்யா ( 19 வயது) என்பது தெரியவந்தது. உடனே அவர் வீட்டுக்கு சென்ற போலீசார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
பெரிய ரவுடி ஆக ஆசைப்பட்டு போலீசில் சிக்கி இளைஞர்
இதில், 7 பட்டா கத்திகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஆதித்யாவையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நான் பெரிய ரவுடியாக வர வேண்டும் என்ற எண்ணத்தில், ஏரியாவில் மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு இடங்களில் இருந்து பட்டா கத்திகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: காதலி மீது ஏற்பட்ட சந்தேகம்! வீடு புகுந்து கத்தியால் குத்தி கொன்ற காதலன்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!
வீட்டில் இருந்து 7 பட்டா கத்திகள் பறிமுதல்
அத்துடன், உண்மையில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக மட்டுமே அவர் பட்டா கத்திகளை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்தாரா அல்லது வேறு ஏதேனும் கொலை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக பட்டா கத்திகளை வாங்கினாரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ், வீடியோக்கள் பதிவிடுதல். சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் ஆதித்யா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
சமூகவலைதளங்களில் பட்டாக் கத்தியுடன் ரீல்ஸ்
இதைத் தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் பெரிய ரவுடி ஆக வேண்டும் என்ற ஆசையில் சமூக வலைதளங்களில் பட்டா கத்தியுடன் ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல, தூத்துக்குடி, தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ரீல்ஸ் பதிவிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரீல்ஸ் மோகத்துக்கு ஒர் அளவே இல்லையா? 80 அடி கிணற்றில் 2 மணி நேரமாக சிக்கி தவித்த இளைஞர்.. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த பரபர சம்பவம்!