செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணை வளையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி.. கிடுக்கிப்பிடி விசாரணை!
Gingee Girl Missing Case : செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரையை ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், முக்கிய தகவல் வெளி வரும் என்று தெரிகிறது .
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் மொத்த பார்வையும் சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரை மீது திரும்பி உள்ளது. அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயதான ஹேமலதா என்ற சிறுமி கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மாயமானார். அவர் மாயமாகி, 42 நாள்கள் ஆகும் நிலையில் தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்து 30 நாள்கள் ஆகும் நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இதனால், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.
சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் தீவிர விசாரணை
இதில், சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரையை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் மேற்கொள்ளும் விசாரணையில் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே இந்த வழக்கில் ராஜ துரையிடம் போலீசார் விசாரணை நடத்தி இருந்த நிலையில், அவரது கூட்டாளி அரவிந்தையும் சேர்த்து காடு மற்றும் சுடுகாடு பகுதிகளில் அழைத்து சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க: நாகர்கோவில் ரயிலில் பெண் கற்பழித்து கொலை! டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்.. எண்ட்ரி கொடுத்த மகளிர் ஆணையம்!
குற்றவாளிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு
இதில், கடந்த சில நாட்களாக கிடைத்துள்ள புதிய தகவல்களை பழைய வாக்குமூலங்களுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். அத்துடன், சிறுமியின் பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட செல்போன் அழைப்பு பதிவுகள், வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஆய்வு செய்த போலீசார், அதில், சில புதிய எண்கள் மற்றும் தொடர்பு எண்களை வைத்து சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜ துரைக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுமி மாயமான நாள் அன்று இரவு ராஜதுரை மற்றும் அவரது கூட்டாளிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
சிறுமி வழக்கில் வெளி வரும் முக்கிய தகவல்
அதன் அடிப்படையில், ராஜதுரையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில், ராஜதுரை முன்பு அளித்த வாக்குமூலங்களையும், தற்போது அளிக்கின்ற வாக்குமூலங்களையும், தொழில்நுட்ப ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், சில வேறுபாடுகள் இருப்பதால் ரகசிய இடத்தில் வைத்து ராஜதுரையிடம் முழு விவரத்தையும் வெளிக்கொண்டு வர அதிகாரிகள் திட்டம் தீட்டி உள்ளனர். இதில், முக்கிய தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: மதுரையில் அதிர்ச்சி! பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்த பள்ளி ஆசிரியர்.. போக்சோவில் கைது!