செக்கானூரணி லாக்கப் மரணம்! உண்மையிலேயே முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா? அப்படி இருந்தால்.. கனிமொழி காட்டமான கேள்வி!
Kanimozhi MP Question Chekkanurani Custodial Death : மதுரை செக்கானூரணி லாக்கப் மரணம் குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் எப்போது வாய் திறந்து பேசுவார், உண்மையிலேயே தமிழக காவல்துறை அவர் வசம் தான் உள்ளதா என்ற கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.
மதுரை, செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு கனிமொழி எம்பி பல்வேறு கேள்விகள் எழுப்பி உள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் மர்மமான முறையில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் கேள்விகளை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக, நவம்பர் 4- ஆம் தேதி அழிக்கப்பட்டதாக கூறப்படும் புகார், நவம்பர் 13- ஆம் தேதி தான் முதல் தகவல் அறிக்கை ( எஃப் ஐ ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாக்கப் மரணத்தில் முதல்வர் விஜய் எப்போது பேசுவார்
அதிலும், நவம்பர் 14- ஆம் தேதி தான் டிஜிட்டல் முறையில் கையெழுத்தும் இடப்பட்டுள்ளது. காவல் நிலைய கழிவறையில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறும் காவல்துறையிடம், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததற்கான புகைப்படம் ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எத்தனை சந்தேகங்களும், முரண்பாடுகளும் நிறைந்திருக்கும் இந்த லாக்கப் மரண வழக்கில் தற்போது வரை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.
மேலும் படிக்க: நாகர்கோவில் ரயிலில் பெண் கற்பழித்து கொலை! டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்.. எண்ட்ரி கொடுத்த மகளிர் ஆணையம்!
உண்மையிலேயே முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா
இன்னும் எத்தனை நாட்களுக்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மௌனமாக இருக்கப் போகிறார். உண்மையிலேயே தமிழக காவல்துறை அவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா. அப்படி இருந்தால் இந்த லாக்கப் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் தந்தையை இழந்த 2 குழந்தைகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதுகாக்க, அவரது குடும்பத்துக்கு உரிய நிதி உதவியை தமிழக வெற்றிக் கழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.
செக்கானூரணி லாக்கப் மரணத்தின் பின்னணி
தேனியில் இருந்து மதுரை வழியாக ஏலக்காய் லோடு ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் பாலகிருஷ்ணன் லாரியில் சென்று கொண்டிருந்தார். செக்கானூரணி பகுதியில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக, அவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில், காவல் மரணம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இதில், காவல் ஆய்வாளர் முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: மதுரையில் அதிர்ச்சி! பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்த பள்ளி ஆசிரியர்.. போக்சோவில் கைது!