அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்! 2 வயது பெண் குழந்தை திடீர் பலி.. திருநெல்வேலியில் பெரும் சோகம்!
Tirunelveli 2 Year Old Girl Dies : திருநெல்வேலி மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பால் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டெங்கு காய்ச்சல், பறவைக்காய்ச்சல் உள்ளிட்டவை வேகமாக பரவி வருகிறது. இதற்கு சில இடங்களில் உயிர் இழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பால் 2 வயது பெண் குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள வி. எம். சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் கணேசமூர்த்தி. இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சினேகா. தம்பதிக்கு 2 வயலில் மகாலட்சுமி என்ற இருந்தார். இந்த நிலையில், குழந்தை மகாலட்சுமிக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை
இதனால், வீட்டின் அருகே உள்ள மருத்துவமனையில் குழந்தையை காண்பித்து சிகிச்சை பெற்றனர். ஆனால், குறிப்பிட்ட நாள்களை கடந்தும் குழந்தைக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதன் காரணமாக மீண்டும் அதை மருத்துவமனையில் குழந்தை காண்பித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அப்போது, காய்ச்சல் குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்தது. இவ்வாறாக கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதனால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் காண்பித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் குறைவதும் திடீரென அதிகம் ஆவதுமாக இருந்து வந்தது.
மேலும் படிக்க: நாகர்கோவில் ரயிலில் பெண் கற்பழித்து கொலை! டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்.. எண்ட்ரி கொடுத்த மகளிர் ஆணையம்!
குழந்தைக்கு திடீர் மூச்சு திணறல்
இந்த நிலையில், குழந்தை வீட்டில் இருந்த போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைப் பார்த்து அச்சம் அடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து, குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசியில் இரு பெண்கள் உயிரிழப்பு
காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே, தென்காசி மாவட்டத்தில், கடையநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர் நலவாழ்வு மையத்தில் வசித்து வரும் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். பரிசோதனையில், அவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
மேலும் படிக்க: மதுரையில் அதிர்ச்சி! பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்த பள்ளி ஆசிரியர்.. போக்சோவில் கைது!