ராணிப்பேட்டையில் பழிக்கு பழி சம்பவம்… விசிக பிரமுகர் கொலையில் “திடுக்”.. கைதானவர்கள் பரபர வாக்குமூலம்!
Ranipet Vck Functionary Murder Arrested : ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் சிவக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 9 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பு வாக்குமூலத்தையும் அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 1- ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் அல்லாளச்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு காயம் அடைந்த விசிக பிரமுகர் சிவகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில், 4 பேர் கொலை சம்பவம் நிகழ்ந்த பின்னர் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொலை மிரட்டல் ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது.
கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
அதன் அடிப்படையில், அந்த 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கோண்ட போது, நண்பரை கொலை செய்ததற்கு பழி வாங்குவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் சிவகுமாரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அனைவரையும் ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சோஷியல் மீடியா கோடீஸ்வரி-க்கு வந்த சோதனை.. நகை திருட்டு வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மதுமிதா.. என்ன கொடுமை சாமி!




உரிய நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்
இதனிடையே, கொலை சம்பவம் நிகழ்ந்த போது, சம்பவ இடத்தில் கிடந்த சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த சிவகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்தப் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
9 பேரை தட்டி தூக்கிய தனிப்படை போலீசார்
தொடர்ந்து, கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இதில் கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த 9 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நெல்லை அருகே சம்பவம்.. கட்டிலில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி.. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்!