நெல்லை அருகே சம்பவம்.. கட்டிலில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி.. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்!
Nellai Worker Murder : திருநெல்வேலி மாவட்டத்தில் மர்ம நபர்களால் தச்சு தொழிலாளி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே தச்சு தொழிலாளி ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மானூர் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கரண்டை இடக்குடி தெரு காமாட்சியம்மன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் கணேசன் ( 47 வயது). தச்சு தொழில் செய்து வந்தார். இவர், நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மரப்பட்டரையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக, மரப்பட்டரையின் மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 4- ஆம் தேதி) வழக்கம் போல வேலை முடிந்து பட்டறையின் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
கட்டிலில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி
இந்த நிலையில், இன்று திங்கள்கிழமை காலை அவர் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக சக தொழிலாளர்கள் மானூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில், நெல்லை ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் பிஸ்வஜித் பாண்டா மற்றும் மானூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, தச்சு தொழிலாளி கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: சோஷியல் மீடியா கோடீஸ்வரி-க்கு வந்த சோதனை.. நகை திருட்டு வழக்கில் இன்ஸ்டா பிரபலம் மதுமிதா.. என்ன கொடுமை சாமி!
மரப்பட்டறை உரிமையாளர்- தொழிலாளர்களிடம் விசாரணை
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், மானூர் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், மரப்பட்டறையில் கணேசனுடன் பணிபுரிந்து வரும் சக தொழிலாளர்கள் மற்றும் மரப்பட்டறையின் உரிமையாளர் ஆகியோரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இரவு நேரத்தில் கணேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
அதன் அடிப்படையில், மரப்பட்டறை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கேமரா காட்சிகளில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். மேலும், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு.. 6 பேர் தீக்குளிக்க முயற்சி.. என்ன காரணம்!