நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு ரூ.5000 உதவித்தொகை – யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசின் புதிய திட்டம்
Indigenous Cattle Rearing Scheme : தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டின மாடுகளான காங்கேயம் புலிக்குளம், பர்கூர், உம்பளச்சேரி, பர்கூர், ஆலம்பாடி அல்லது தோடா எருமை மாடு போன்ற நாட்டின மாடுகளை வளர்க்கும் பெண்களுக்கு ரூ.5000 உதவித் தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 22 : நாட்டின மாடுகளை வளர்க்கும் பெண்களுக்கு ரூ.5,000 வரை பராமரிப்பு உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நாட்டின மாடுகளான காங்கேயம், புலிக்குளம், உம்பளச்சேரி, பர்கூர், ஆலம்பாடி அல்லது தோடா எருமை போன்ற நாட்டின மாட்டு இனங்களில் வளர்ப்பவருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டின மாடுகளான காங்கேயம் புலிக்குளம், பர்கூர், உம்பளச்சேரி, பர்கூர், ஆலம்பாடி அல்லது தோடா எருமை மாடு போன்ற நாட்டின மாடுகளுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நாட்டின மாடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் நாட்டின மாடுகளை பாதுகாக்கும் நோக்கில் அதனை வளர்க்கும் பெண்களுக்கு மகளிர் சுய உதவிக் குழு மூலம் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. அதன் படி நாட்டின மாடுகளை வளர்க்கும் 5000 பெண்களுக்கு 5000 உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இதையும் படிக்க : பறவைக் காய்ச்சல் எதிரொலி… இந்திய முட்டைகளுக்கு தடைவிதித்த ஓமன் – நாக்கல்லில் முடங்கிய முட்டைகள்




நாட்டின மாடுகள் வளர்ப்பு உதவித்தொகை
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைசார்பில் கடந்த 13.10.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், நாட்டின மாடுகள் நம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவை, குறைந்த செலவில் வளர்க்கக்கூடியவை என்பதால் இவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியம். இதனை கருத்தில் கொண்டு அதனால் தான் இந்த முறை இந்த திட்டத்தில் பெண்களை மையமாக வைத்து அரசு ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளது. நாட்டின மாடுகளை வளர்க்கும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களில் 5000 பேருக்கு ஒரு மாட்டுக்கு ரூபாய் 5000 வீதம் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக மொத்தம் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டிபிடி முறையில் செலுத்தப்படும்.
இதையும் படிக்க : சோனியா குடும்ப கதையை கேட்க நேரமிருந்தது.. ஆனால் விவசாயிகள் பற்றி பேச நேரமில்லையா முதல்வர் அவர்களே? எடப்பாடி ஆக்ரோஷம்!
யாருக்கு கிடைக்கும்?
- இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் அவர்கள் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- அதே போல காங்கேயம், புலிக்குளம், உம்பளச்சேரி, பர்கூர், ஆலம்பாடி அல்லது தோடா எருமை போன்ற நாட்டின மாட்டு இனங்களில் ஏதாவது ஒன்றை வளர்ப்பவராக இருக்க வேண்டும்.
- அந்த மாட்டுக்கு கால்நடை பராமரிப்புத்துறையின் காது அடையாள அட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- ஒரு பயனாளிக்கு ஒரு மாட்டுக்கு தான் உதவித்தொகை கிடைக்கும்.
- அதே போல பயனாளிகளை தேர்வு செய்யும் போது குறைந்தபட்சம் 30 சதவீதம் பேர் பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.