10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் – ரூ. 57 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு ஒப்புதல்
Free Milch Cow Scheme : ஊரகப் பகுதிகளில் வசிக்கும் தகுதியுள்ள 10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்காக , நடப்பு நிதியாண்டில் ரூ.57 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 27 : ஊரகப் பகுதிகளில் வசிக்கும் தகுதியுள்ள 10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் (Free Milch Cows) வழங்குவதற்காக, நடப்பு நிதியாண்டில் ரூ.57 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஊரக பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள்
2026–27-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், பால் உற்பத்தியிலும் பால் கொள்முதலிலும் தமிழகம் தேசிய அளவில் முன்னிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நிதி அமைச்சர், உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும், ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், ஆண்டுதோறும் 10,000 தகுதியுள்ள பெண்களுக்கு விலையில்லாக் கறவை மாடுகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலேயே தற்போது இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’ : சென்னை உள்பட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை




இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 8 லிட்டர் பால் கறக்கும் திறன் கொண்ட, ஆரோக்கியமான, அதிகப் பால் தரும் கலப்பினக் கறவை மாடு ஒன்று வழங்கப்படும். ஒதுக்கப்பட்ட நிதியின்படி, ஒரு பயனாளிக்குச் சராசரியாக சுமார் ரூ.57,000 செலவிடப்படுகிறது. உயர் உற்பத்தித் திறன் கொண்ட மாடுகளை வழங்குவதன் மூலம், ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்.
இதுதவிர, மாநிலத்தின் பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துதல், அறிவியல் முறையிலான பால் பண்ணை முறைகளை ஊக்குவித்தல், குடும்பங்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை மேம்படுத்துதல், நிலையான வருமானம் தரும் தொழில் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவையும் இத்திட்டத்தின் நோக்கங்களாக கூறப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளில் 3 முதல் 4 கன்றுகள்
வழங்கப்படும் கறவை மாடு மூலம் பயனாளிக் குடும்பத்துக்குத் தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். மேலும், முறையான கால்நடைப் பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை மூலம், ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் மூன்று முதல் நான்கு கன்றுகளை ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒரு மாடு என்பது பல மாடுகளாகப் பெருகி, பயனாளிகளுக்கு நீண்டகாலச் சொத்தாகவும், நிலையான பொருளாதாரப் பலனாகவும் அமையும் என அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : தங்கத்திற்குப் பதில் போலி உலோகம்.. கோவையில் வியாபாரிகளை ஏமாற்றிய மேற்குவங்க கும்பல் கைது!!
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
இதற்கிடையே தீபாவளியை முன்னிட்டு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு அரசு பொதுத்துறை ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.