தங்கத்திற்குப் பதில் போலி உலோகம்.. கோவையில் வியாபாரிகளை ஏமாற்றிய மேற்குவங்க கும்பல் கைது!!
Two West Bengal Natives Arrested: கோவையில் தங்க நகை கட்டிகள் தருவதாகக் கூறிப் போலி உலோகம் கொடுத்துப் பல லட்சம் மதிப்பிலான நகைகளை ஏமாற்றிப் பறித்துச் சென்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 265 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை, அக்.27: தமிழகத்தின் முக்கிய வணிக மையங்களில் ஒன்றாகத் திகழும் கோவையில், வணிகர்களை ஏமாற்றிப் பெரும் பொருட்சேதம் விளைவிக்கும் மோசடிச் சம்பவங்கள் அவ்வப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, விலைமதிப்பற்ற தங்க நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளைக் குறிவைத்து வடமாநிலங்களைச் சேர்ந்த கயவர்கள் பல்வேறு தந்திரமான வழிகளில் கைவரிசை காட்டி வருகின்றனர். அந்த வகையில், கோவை மாநகரப் பகுதிக்கு உட்பட்ட முக்கிய வணிக வீதிகளான ராஜவீதி மற்றும் தெலுங்கு வீதி சந்திப்புப் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறிய துணிச்சலான மோசடிச் சம்பவங்கள் நகை வியாபாரிகளிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிக்க: மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பண்டிகைக் காலத்தில் நெய், வெண்ணெய், இனிப்புப் பொருட்களின் விலை கடும் உயர்வு!!
போலி உலோகம் தயாரித்த மர்மக் கும்பல்:
கோவை மாநகர் B3 வெரைட்டிஹால் ரோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்க நகை கட்டிகளைத் தருவதாகக் கூறிப் போலி உலோகத்தைக் கொடுத்து ஏமாற்றியது தொடர்பாக வியாபாரிகள் புகார்களை அளித்தனர். புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின்பேரில், தெற்குப் பகுதி காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அறிவியல் பூர்வமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணையில், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே. ஜீல்பிகர் உசேன் மற்றும் ரூபல்காஜ் ஆகிய இருவரும் காப்பர் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களை ஒன்றாகக் கலந்து போலி உலோகத்தைத் தயாரித்துள்ளது அம்பலமானது. மேலும், அதற்குத் தங்கம் போன்றே மின்னும் வகையில் நவச்சாரம் மற்றும் வெங்காரம் உள்ளிட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு மெருகேற்றி (Chemical Polish) வியாபாரிகளை நயவஞ்சகமாக ஏமாற்றி வந்துள்ளனர்.
வியாபாரிகளிடம் நடத்திய கைவரிசை:
வியாபாரிகளிடம் தாங்கள் தயாரித்த போலி உலோகத்தைக் காட்டி, “தங்களுக்கு அவசரமாகப் பணத்தேவை உள்ளது அல்லது அவசரமாகச் செல்ல வேண்டும்” என்று நம்பும்படி நாடகமாடி இக்க கும்பல் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளது. அதைப் பார்த்துக் கண்மூடித்தனமாக அசல் தங்கம் என நம்பிய வியாபாரிகள், தங்களது கைவசம் இருந்த பல லட்சம் மதிப்பிலான 916 அசல் தங்க நகைகளை இவர்களிடம் கொடுத்துள்ளனர். அதற்குப் பதிலாகப் போலி உலோகம் பொதிந்த கட்டிகளைப் பெற்றுக்கொண்டு வியாபாரிகள் ஏமாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையின் மூலம் குற்றவாளிகள் இருவரும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: புழல் சிறையில் அடைக்கப்பட்ட உயிர் நண்பன்.. நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன உதயநிதி ஸ்டாலின்..
காவல் துறையின் முக்கிய எச்சரிக்கை:
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து போலி உலோகம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டதோடு, வியாபாரிகளிடம் ஏமாற்றிப் பறிக்கப்பட்ட 265 கிராம் தங்க நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மோசடிகளில் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள கோவை மாநகரக் காவல் துறையினர், தங்க நகைகள் மற்றும் கட்டிகளை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். துரிதமாகச் செயல்பட்டு மோசடி கும்பலைக் கூண்டோடு கைது செய்த தனிப்படை போலீசாரைத் தங்க நகை வியாபாரிகள் மற்றும் பட்டறை உரிமையாளர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.