கட்டுக்கட்டாக பணத்துடன் கண்டெய்னர் லாரி.. துப்பாக்கியுடன் சுற்றி நின்ற போலீசார்.. சேலத்தில் நள்ளிரவில் பரபரப்பு!
Salem Cash Container Truck : சேலம் மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு கட்டுக்கட்டாக பணத்துடன் சென்ற கண்டெய்னர் லாரி நடு வழியில் நின்றது. அதனை துப்பாக்கி ஏந்திய போலீசார் சுற்றி நின்று பாதுகாப்பு அளித்தனர். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். மிக முக்கியமான ரூபாய் நோட்டுகள் என்பதால் இந்த லாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் பிரத்யேக பாதுகாப்பு வாகனங்கள் மூலம் பலத்த பாதுகாப்பு வளையமும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த லாரிகள் இன்று அதிகாலை சேலம் மாநகர எல்லை பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநர்கள் தங்களுக்கு தெரியாத புதிய பாதை என்பதால் கூகுள் மேப் செயலியில் காண்பித்த வழியில் சென்று கொண்டிருந்தனர். ஆனால், பிரதான தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டிய அந்த லாரிகளுக்கு கூகுள் மேப் செயலி ஒரு குறுகலான மாற்று பாதையே காண்பித்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் பணத்துடன் சிக்கிய கண்டெய்னர் லாரி
அதன்படி, கண்டெய்னர் லாரிகளின் ஓட்டுநர்கள் அந்த குறுகிய பாதை வழியாக லாரியை இயக்கி உள்ளனர். இதனால், நெடுஞ்சாலையில் இருந்து விலகிய அந்த கண்டைனர் லாரிகள் சேலம் மாநகர பகுதியில் உள்ள ஒரு குறுகலான குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பெரிய அளவிலான லாரிகள் திரும்ப முடியாத அளவுக்கு அந்த சாலை குறுகலாக இருந்ததன் காரணமாக, மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் கண்டெய்னர் லாரி நின்றது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!




கண்டெய்னர் லாரியை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார்
இது தொடர்பாக சேலம் மாநகர ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரூபாய் நோட்டுகள் இருக்கும் லாரிகளின் பாதுகாப்பு கருதி நள்ளிரவு முழுவதும் அந்த பகுதி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போலீசார் கண்டெய்னர் லாரியை சுற்றி இரவு முழுவதும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
கூகுள் மேப்பை நம்பி வழி மாறிய ஆர்பிஐ வங்கி லாரி
இதைத் தொடர்ந்து, கண்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கூகுள் மேப்பை நம்பி தடம் மாறி வந்ததை உறுதி செய்த பின்னர் லாரிகளை அந்தப் பாதையில் இருந்து பின்னோக்கி இயக்கி பிரதான தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சரியான வழியே போலீசார் காண்பித்தனர். தொடர்ந்து, அந்த கண்டெய்னர் லாரிகள் பாதுகாப்பாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் படிக்க: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை.. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்.. பரபரப்பு தகவல்கள்!