ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!
Gem Veeramani Case : சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் வீரமணி வழக்கில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ள அருண் ஐபிஎஸ் அதிகாரி மீதான புகாரை விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் 10- க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக இருந்ததாக உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், மற்றொரு உதவியாளர் கணேசன், 2 கார் ஓட்டுநர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றது. இந்த வழக்கு கடந்த 2025- ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகவும், அது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளாமல் வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பட்டியலின காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சித் குமார், அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண், தென் சென்னை கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அருண் ஐபிஎஸ் மீதான புகாரை விரைந்து விசாரிக்க மனு
இதைத் தொடர்ந்து இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கில் அருண் ஐபிஎஸ் மீதான புகாரை விரைந்து விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வீரமணி வழக்கை முடித்து வைப்பதற்காக ரூ.24 கோடி தங்கத்தை லஞ்சமாக வாங்கியதாகவும், சொத்துக்கள் கை மாறியது குறித்து விசாரிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் இருவர் உடல் கருகி பரிதாப இழப்பு..




சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜர்
இதனிடையே, கூடுதல் டிஜிபி அருண் ஐபிஎஸ் மற்றும் ஐஜி கண்ணன் ஆகியோர் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் இருந்தன. அதன்படி, இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி இருந்தது. அந்த சம்மனை ஏற்ற இரு அதிகாரிகளும் கடந்த அக்டோபர் 12- ஆம் தேதி சென்னை எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகினர்.
3 மணி நேரம் 80 கேள்விகள் கேட்ட எஸ்ஐடி குழு
அவர்களிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில், ஜெம் வீரமணி வழக்கை முறையாக விசாரணை மேற்கொள்ளாதது ஏன். வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன். போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டது ஏன். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தப்பிக்க வைப்பதற்காக சட்ட விரோதமான பண பரிமாற்றம் நடைபெற்றதா என்பன உள்ளிட்ட 80 கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி மோசடி வழக்கு.. அன்பில் மகேஷ் முன்ஜாமின் மனு தள்ளுபடி.. கைது செய்யப்படுவாரா?