AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கே.என்.நேருவுக்கு பின்னடைவு.. ரூ. 634 கோடி லஞ்சப் புகாரில் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!

High Court Dismisses Review Petition of K.N. Nehru: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கே.என்.நேருவுக்கு பின்னடைவு.. ரூ. 634 கோடி லஞ்சப் புகாரில் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!
கே.என்.நேரு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Oct 2026 13:52 PM IST

சென்னை, அக்.26: கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் பணியிடங்கள் நியமிக்கப்பட்டதில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இந்தத் துறை சார்ந்த பல்வேறு பதவிகளுக்கான நியமனங்களின் போது சுமார் 634 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் பதிவாகின. இந்த முறைகேடு தொடர்பாகத் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை சார்பில் முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அமலாக்கத்துறையின் அந்தக் கடிதத்தின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அப்போதைய எதிர்க்கட்சித் தரрим சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: ரூ.100 கோடி மோசடி வழக்கு.. அன்பில் மகேஷ் முன்ஜாமின் மனு தள்ளுபடி.. கைது செய்யப்படுவாரா?

கே.என்.நேருவின் மறுஆய்வு மனு:

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கிடையே, தங்களது தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே தங்களுக்கு எதிரான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்து, இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி எதிர்க்கட்சியான திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து வந்தது.

இருதரப்பு வாதங்களும் வாதப் பிரதிவாதங்களும்:

இந்த மனு மீதான விசாரணையின் போது, நேரு தரப்பில் தனது தரப்பு நியாயங்களைக் கேட்காமல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதன் மூலம் தனிநபர் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய அரசால் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை இப்போது வாபஸ் பெற முடியாது என்றும் வாதிடப்பட்டது. அதற்கு மாறாக, அரசுத் தரப்பு மற்றும் எதிர் தரப்பு வாதங்களில், அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தகுந்த ஆதாரங்களுடன் கடிதம் எழுதியும் முந்தைய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாத்து வந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், தற்போதைய உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய கால அவகாசம் வழங்கப்பட்டும் நீதிமன்றத்தில் மறுஆய்வு கோருவது ஏற்புடையதல்ல என்றும் வாதிடப்பட்டது.

இதையும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் இருவர் உடல் கருகி பரிதாப இழப்பு..

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:

இருதரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்; மேலும் அந்த மனுவை முழுமையாகத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு தமிழக அரசியல் அரங்கிலும், எதிர்க்கட்சியான திமுக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us