கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் இருவர் உடல் கருகி பரிதாப இழப்பு..
Krishnagiri Mathur Accident: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் டோல்கேட் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பைக்குகள் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, அக்டோபர், 26: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் பொதுமக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி வருகின்றன. சாலை விதிகளைப் பின்பற்றுவதில் ஏற்படும் சறுக்கல்களும், அதிவேகப் பயணங்களும் சில நேரங்களில் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் டோல்கேட் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பைக்குகள் தீப்பிடித்து எரிந்து இரண்டு பேர் உடல் கருகிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: காதல் விவகாரத்தில் கோர முடிவு.. காதலியை வெட்டிக்கொன்ற காதலன் செய்த செயல்.. ஓசூர் அருகே பயங்கரம்!
பைக்குகளில் திடீரெனப் பற்றிய தீப்பிழம்புகள்:
கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மத்தூர் டோல்கேட் பகுதி அமைந்துள்ளது. இன்று காலையில் வழக்கமான போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாகச் சென்ற ஒரு இருசக்கர வாகனமும், அதற்கு எதிர் திசையில் அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த மோதலின் அதிவேகத் தாக்கத்தால் பைக்குகளின் பெட்ரோல் டேங்க் சேதமடைந்து திடீரெனத் தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென்று பரவியதால் இரண்டு இருசக்கர வாகனங்களும் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.
உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலி:
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் தீயில் சிக்கி மீள முடியாமல் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இவ்விகபத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் மீட்கப்பட்டு உடனடியாக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காகக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. விபத்து குறித்துத் தகவல் அறிந்த மத்தூர் காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: சென்னையில் நடந்த நடிகர் தனுஷ் நற்பணி இயக்க கூட்டம்.. மகளிருக்கு வெள்ளி விளக்கு பரிசு.. பேசியது என்ன?
காவல்துறையின் தீவிர விசாரணையும்:
நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் 27 வயதான வேலு என்பதும், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான திருப்பதி என்பதும் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் ஏராளமான செல்போன்கள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்ததால், இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும், வேறு எவரேனும் வாகனங்களில் பயணித்தார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பைக்குகள் தீப்பிடித்து எரிந்து இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கண்ணீரையும் வரவழைத்துள்ளது.