AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவையில் பனிப்பொழிவு போல் பொங்கிய ரசாயன நுரை.. கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்!!

Coimbatore Chemical Foam: கோவையில் கொட்டித் தீர்த்த கனமழையைத் தொடர்ந்து, குனியமுத்தூர் ஆத்துப்பாலம் பகுதியில் பனிப்பொழிவு போல நச்சு ரசாயன நுரை பெருக்கெடுத்து ஓடுகிறது. காற்றில் மிதந்து வீடுகளுக்குள் பரவும் இந்த நுரையால் குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ள நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

கோவையில் பனிப்பொழிவு போல் பொங்கிய ரசாயன நுரை.. கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்!!
ரசாயன நுரை
Sekaran S
Sekaran S | Published: 26 Oct 2026 14:53 PM IST

கோவை, அக்.26: கோவை மாநகரப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வழக்கமாக மழைநீரானது பாதுகாப்பாக நீர்நிலைகளுக்குச் சென்று சேர வேண்டிய சூழலில், சில இடங்களில் சட்டவிரோதமாகச் சுழலும் தொழிற்சாலை கழிவுகளால் புதிய அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள வடிகால் பாதைகளில் திடீரென நச்சு ரசாயன நுரைகள் வெண்பனி போலப் பெருக்கெடுத்து மிதப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சுகாதாரக் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மழைக் காலத்தைப் பயன்படுத்தி கழிவுநீரைத் திருட்டுத்தனமாக வெளியேற்றும் இத்தகைய நடவடிக்கைகளால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் இருவர் உடல் கருகி பரிதாப இழப்பு..

பனிப்பொழிவு போல மிதக்கும் ரசாயன நுரை:

கோவை, குனியமுத்தூர் ஆத்துப்பாலம் பகுதியில் அமைந்துள்ள சுண்ணாம்பு காளவாய் பாதையில் மழைநீர் வெள்ளம் போலப் பாய்ந்து செல்லும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அப்பகுதியில் இயங்கி வரும் சில தொழிற்சாலைகள் அல்லது சட்டவிரோத நிறுவனங்கள், தங்களது அபாயகரமான ரசாயனக் கழிவுகளை மழைநீரோடு கலந்து விட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, மழைநீரில் அளவுக்கு அதிகமான அளவில் வெண்மையான நுரை பெருக்கெடுத்து, அப்பகுதி முழுவதையும் பனிப்பொழிவு போல மூடியபடி காட்சி அளிக்கிறது. மேலும், மழைநீரின் வேகத்தினாலும் பலத்த காற்றினாலும் இந்த நுரைத் திரள்கள் காற்றில் மிதந்து, வானில் பறந்து அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள்ளும் பரவி வருகின்றன.

சுகாதாரப் பாதிப்புகளும் பொதுமக்கள் பீதியும்:

காற்றில் மிதந்து வீடுகளுக்குள் நுழையும் இந்த நச்சு ரசாயன நுரை காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறிய குழந்தைகள் சுவாசம் சார்ந்த நோய்கள், சருமப் பாதிப்புகள் (Skin allergy) மற்றும் கண்கள் எரிச்சல் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவார்களோ என்ற கடுமையான பீதியில் உறைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்த ரசாயனம் கலந்த கழிவுநீர் நிலத்தடி நீரில் கலக்கும் பட்சத்தில் அப்பகுதியின் குடிநீரும் நஞ்சாகும் அபத்து நிலவுவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தினசரி வாழும் சூழலிலேயே ஆபத்தான ரசாயனங்கள் பரவுவது அப்பகுதி மக்களின் நிம்மதியைப் பறித்துள்ளது.

இதையும் படிக்க: ரூ.100 கோடி மோசடி வழக்கு.. அன்பில் மகேஷ் முன்ஜாமின் மனு தள்ளுபடி.. கைது செய்யப்படுவாரா?

மாநகராட்சிக்கு எழும் கோரிக்கைகள்:

எனவே, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் (TNPCB) மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மழைநீரில் ரசாயனக் கழிவுகளைக் கலந்துவிட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், காற்றில் நுரை பரவுவதைத் தடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாகச் சீரமைக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

Follow Us