AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தூத்துக்குடியில் கோஷ்டி மோதலில் கல்லூரி மாணவன் வெட்டி படுகொலை.. கிராமத்தில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

2nd-Year College Student Hacked to Death: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வீட்டின் முன்பு கழிவுநீர் செல்வது தொடர்பான முன்விரோதத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் கோஷ்டி மோதலில் கல்லூரி மாணவன் வெட்டி படுகொலை.. கிராமத்தில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு!
உயிரிழந்த கல்லூரி மாணவர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Oct 2026 11:49 AM IST

தூத்துக்குடி, அக்.26: தமிழகத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் வீடுகளுக்கு இடையே நிலவும் சாதாரணப் பாதைக் கோளாறுகள் மற்றும் கழிவுநீர் தேங்கும் விவகாரங்கள் சில நேரங்களில் விபரீதமான பாதையில் சென்று கொலை வரை முடிவடைந்து விடுவது சமூகத்தில் பெரும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கோவில்குளம் பகுதியில் வீட்டின் முன்பு கழிவுநீர் செல்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த முன்விரோதம், தற்போது ஒரு கல்லூரி மாணவனின் உயிரைப் பறித்துள்ள கோரச் சம்பவமாக உருவெடுத்துள்ளது. கிராமப் பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் வன்முறை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் இருவர் உடல் கருகி பரிதாப இழப்பு..

வெடித்த மோதலும் அரிவாள் வெட்டும்:

ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் குடும்பத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் குடும்பத்திற்கும் இடையே கழிவுநீர் செல்வது தொடர்பாகத் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை முடிந்த பிறகு பொதுமக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் பேசிக்கொண்டிருந்தபோது, மாரியப்பன் தரப்பினருக்கும் சுந்தர்ராஜன் தரப்பினருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதை அடுத்து, இரு தரப்பினரும் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இந்த கோரத் தாக்குதலில் மாரியப்பனின் மகனும், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இசைக்கராஜா என்ற மாணவர் மீது அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

மாணவன் பரிதாப உயிரிழப்பு:

அரிவாள் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்லூரி மாணவன் இசைக்கராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சண்டையில் எதிர்தரப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாகத் தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலைக் கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, உயிரிழந்த இசைராஜாவின் உடல் மற்றும் காயமடைந்த சுந்தர்ராஜன் ஆகியோரை மீட்டுச் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையிலும் இரு தரப்பினரும் கூடக்கூடும் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதையும் படிக்க: காதல் விவகாரத்தில் கோர முடிவு.. காதலியை வெட்டிக்கொன்ற காதலன் செய்த செயல்.. ஓசூர் அருகே பயங்கரம்!

காவல்துறையின் தீவிர கண்காணிப்பு:

இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆழ்வார்கோவில்குளம் கிராமத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்கும் பொருட்டுப் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மாணவன் ஒருவன் கோஷ்டி மோதலில் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தையே உலுக்கியுள்ளதுடன், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Follow Us