என்னையா கேலி செய்கிறாய்.. என்ன செய்கிறேன் பார்.. நண்பனை கோடாரியால் பதம் பார்த்த தொழிலாளி.. தூத்துக்குடியில் பகீர் சம்பவம்!
Thoothukudi Worker Murder : தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னை கேலி செய்த சுமை தூக்கும் தொழிலாளியை சக நண்பர் கோடாரியால் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள திட்டக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் காளிராஜ். இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் தினசரி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காளிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் திட்டக்குளம் தினசரி மார்க்கெட் வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் கேலி மற்றும் கிண்டல் செய்து பேசியுள்ளனர். அப்போது, காளிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஒருவரை ஒருவர் வம்புக்கு இழுத்து கேலி செய்ததில் திடீரென அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த நண்பர் அயோத்தி தான் மறைத்து வைத்திருந்த கோடாரியால் காளிராஜை சரமாரியாக வெட்டினார்.
கோடாரியில் நண்பனை வெட்டி கொன்ற தொழிலாளி
இதில், காளி ராஜ் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அயோத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதிகாலை நேரத்தில் மார்க்கெட் வளாகத்தில் யாரும் இல்லாததால் இந்த கொடூர சம்பவம் யாருடைய கவனத்துக்கும் வரவில்லை. சற்று விடிந்த பின்னர் மார்க்கெட் வளாகப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் கூட தொடங்கியது. அப்போது தான், சுமை தூக்கும் தொழிலாளி காளிராஜ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!




கொலையுண்டவரின் சடலம் மீட்பு
உடனே, இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிராஜ் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மார்க்கெட் வளாக பகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், மார்க்கெட் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கொலையாளி அயோத்தியை தேடி வருகின்றனர்.
கொலையாளிக்கு போலீஸார் வலை வீச்சு
இது தொடர்பாக காளிராஜின் குடும்பத்தினர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், காளி ராஜ் மற்றும் அயோத்தி இடையே ஏற்பட்ட தகராறுக்கு என்ன காரணம். மது போதையில் ஏற்பட்ட தகராறில் காளிராஜ் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: டெங்குவுக்கு மத்தியில் அச்சுறுத்தும் எலி காய்ச்சல்.. கன்னியாகுமரியில் மின்துறை ஊழியர் பலி.. பீதியில் மக்கள்!