டெங்குவுக்கு மத்தியில் அச்சுறுத்தும் எலி காய்ச்சல்.. கன்னியாகுமரியில் மின்துறை ஊழியர் பலி.. பீதியில் மக்கள்!
Kanyakumari EB Employee Dies Leptospirosis : கன்னியாகுமரி மாவட்டத்தில் எலி காய்ச்சல் பாதிப்பால் மின்வாரிய களப்பணியாளர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு பரவி வரும் நிலையில் எலி காய்ச்சல் உயிரிழப்பு பொது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில் சத்தமே இல்லாமல் எலி காய்ச்சல் பரவி கன்னியாகுமரியில் ஒருவரை பலி கொண்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அனந்தங்கரை பகுதியை சேர்ந்தவர் சுபின் ( 31 வயது). இவர், சென்னை மாவட்டம், பரணிபுத்தூரில் செயல்பட்டு வரும் மின் பகிர்மான நிலையத்தில் களப்பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், மின்வாரிய களப்பணியாளர் சுபினுக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது, அவரது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சிகிச்சை பெறுவதற்கான சென்றார்.
எலி காய்ச்சல் பாதிப்பால் மின்துறை ஊழியர் பலி
அங்கு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், எலி காய்ச்சல் தொற்று பாதிப்பு அதிகமாக ஆனதன் காரணமாக மின்வாரிய களப்பணியாளர் சுபின் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு, காய்ச்சல் தொற்று ஏற்பட்ட நிலையில், அதனை சாதாரண காய்ச்சல் என்று எண்ணி முறையாக சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில், காய்ச்சல் தீவிரமானதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் பரிசோதனை கொண்ட நிலையில், எலி காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் படிக்க: திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு – வெளியான பரபரப்பு தகவல்




திருமணத்துக்கு பெண் பார்த்த நிலையில் ஊழியர் உயிரிழப்பு
எலி காய்ச்சல் என்று தெரியாமல் சிகிச்சையை தாமதமாக மேற்கொண்டதன் காரணமாகவே சுபின் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சுபனின் பெற்றோர் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 31 வயது ஆகும் சுபினுக்கு அவரது பெற்றோர் திருமணத்துக்காக பெண் பார்த்து வந்தனர். அத்துடன் தனது சொந்த ஊரில் புதிதாக வீடு ஒன்றையும் அவர் கட்டி வந்தார். அடுத்த மாதம் புதுமனை புகுவிழா நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் எலி காய்ச்சலால் சுபின் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு பரவலுக்கு மத்தியில் எலி காய்ச்சல்
தமிழகத்தில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருவதுடன் ஆங்காங்கே உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இதில், தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரு பெண்கள் அண்மையில் உயிரிழந்தனர். இதே போல, திருப்பூரிலும் நான்கு வயது சிறுவன் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், சத்தமே இல்லாமல் எலி காய்ச்சல் பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க: கர்ப்பிணியிடம் தகராறு செய்த ரவுடி.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. அடுத்து நடந்த ஷாக்!