AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு – வெளியான பரபரப்பு தகவல்

Tiruppur Child Dengue Death : திருப்பூர் மாவட்டம் குங்குமம்பாளையத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன், டெங்கு காய்ச்சலால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு – வெளியான பரபரப்பு தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Oct 2026 08:11 AM IST

திருப்பூர், அக்டோபர் 25 : திருப்பூர் (Tiruppur) மாவட்டம் குங்குமம்பாளையத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன், டெங்கு காய்ச்சலால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மரணம் குறித்து மருத்துவமனை டீன் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

குங்குமம்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் குமாருக்கு 4 வயதில் தமிழ் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையல் கடந்த 2026 அக்டோபர் 20 அன்று சிறுவன் தமிழுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 6,900 ஆகவும், தட்டணுக்களின் எண்ணிக்கை 2.56 லட்சமாகவும் இருந்தன. இவை இயல்பான அளவுகள் என்பதால், சிறுவனுக்குப் புறநோயாளிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இதையும் படிக்க : குழந்தை இல்லை.. போதிய வருமானமில்லை.. எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை.. சென்னையில் தம்பதி சோக முடிவு!

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 21, 2026 அன்றும் காய்ச்சல் நீடித்ததால், மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நரம்பு வழியாகத் திரவங்கள் (IV Fluids) செலுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2026 அக்டோபர் 22 அன்று காய்ச்சலுடன் வாந்தியும் ஏற்பட்டதால், மூன்றாவது முறையாக அதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில், வெள்ளை அணுக்கள் 2,400 ஆகவும், தட்டணுக்கள் 1.37 லட்சமாகவும் குறைந்திருந்தன.

இதனையடுத்து அக்டோபர் 22, 2026 அன்று மாலை 7.30 மணியளவில் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், தட்டணுக்களின் எண்ணிக்கை 66,000 ஆக குறைந்ததால், டெங்கு பரிசோதனையில் NS1 ஆன்டிஜென் ‘பாசிட்டிவ்’ என உறுதியானது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

மேல்சிகிச்சைக்காக, 2026 அக்டோபர் 23 அதிகாலை 1.18 மணிக்குச் சிறுவன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்டபோது, ஏற்கெனவே ஏற்பட்ட வலிப்பின் பாதிப்புகளுடன், ரத்த அழுத்தமும் சீராக இல்லாத நிலையில் இருந்தார். சிகிச்சையின்போது மீண்டும் வலிப்பு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் அதிகரித்ததால், வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கத் தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி, அன்று மாலை 7.35 மணிக்குச் சிறுவன் உயிரிழந்தார். மகனின் உடலைக் கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதது, அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.

இதையும் படிக்க : தொடர் கனமழை.. முடங்கிய ஊட்டி.. மலை ரயில் சேவை ரத்து- சுற்றுலாத் தலங்கள் மூடல்!

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

பருவமழைக் காலத்தில் டெங்கு பரவல் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். காய்ச்சலுடன் தொடர் வாந்தி, கடுமையான வயிற்று வலி, ஈறுகள் அல்லது மூக்கிலிருந்து ரத்தக்கசிவு, அதிகச் சோர்வு, அமைதியின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். காய்ச்சல் குறையத் தொடங்கும் நாள்களில்தான் டெங்குவின் தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், அந்தக் கட்டத்தில் கூடுதல் கவனம் தேவை.

டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், தேங்கி நிற்கும் நல்ல நீரில்தான் உற்பத்தியாகின்றன. வீடுகளைச் சுற்றியுள்ள பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பூந்தொட்டிகள், தண்ணீர்த் தொட்டிகள் ஆகியவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். இந்தக் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும் என்பதால், குழந்தைகளுக்கு முழுக்கை ஆடைகள் அணிவிப்பதும், கொசுவலை பயன்படுத்துவதும் பாதுகாப்பானது.

Follow Us