உருவானது அர்னாப் புயல்.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை? – டெல்டா வெதர்மேன் சொன்ன விளக்கம்
Tamil Nadu Weather Chennai Rain: அக்டோபர் 24, 2026 அன்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பு அறிக்கையின்படி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய உள்ளது. இரண்டு முக்கிய காற்றழுத்த அமைப்புகளின் தாக்கத்தால், அடுத்த சில நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
வானிலை நிலவரம் குறித்து விளக்கம் அளித்துள்ள டெல்டா வெதர்மேன், மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயல் சின்னமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 26ஆம் தேதி அர்னாப் புயலாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலுக்கு பங்களாதேஷ் அர்னாப் எனப் பெயரிட்டுள்ளது. இது தெற்கு அல்லது மத்திய ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
மறுபுறம், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளக் கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்து வருகிறது. இந்தப் பகுதி மீண்டும் தமிழகத்தை நோக்கி நகர்ந்து, வங்கக்கடலில் உள்ள அமைப்புடன் சேர்ந்து மழையைப் பொழிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read : நீலகிரிக்கு ரெட் அலர்ட்: அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடல்
தீவிரமடையும் பருவமழை மற்றும் ரெட் அலர்ட்
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த சூழலில், மேற்குறிப்பிட்ட இரண்டு காற்றழுத்த அமைப்புகளின் தாக்கத்தால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய சாதகமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு (அக்டோபர் 25 மற்றும் 26) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழைப்பொழிவுக்கான வாய்ப்புள்ள பகுதிகள்
இன்று இரவு முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழைப்பொழிவு தீவிரம் அடையும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும், ஒரு சில இடங்களில் அதீத கனமழைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, வால்பாறை, சின்னக்கல்லாறு, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள் மாவட்டங்கள், கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களிலும் பரவலாக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மழைப்பொழிவு தீவிரம் அடையவுள்ளதால் பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
1. கொடைக்கானல், குற்றாலம், உதகை, மேகமலை, தேக்கடி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு அடுத்த நான்கு நாட்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
2. அருவிகள், நீர்வீழ்ச்சிகளுக்கு அருகே செல்வதையும், குளிப்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.
3. கடல் கொந்தளிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் அக்டோபர் 25 முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆழ்கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.
4. கடல் சீற்றத்தைக் கருத்தில்கொண்டு, கடலில் இறங்குவதையும், குளிப்பதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.