தொடர் கனமழை.. முடங்கிய ஊட்டி.. மலை ரயில் சேவை ரத்து- சுற்றுலாத் தலங்கள் மூடல்!
Ooty Mountain Train : நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாகவும், சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும் இரு நாள்கள் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனிடையே, வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதில், வங்க கடல் பகுதியில் உருவான புயல் சின்னம் வருகிற 26- ஆம் தேதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் அதிக கன மழைக்கான எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த வண்ணமாக இருந்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாள்கள் ரத்து
இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 10- க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: திருமணமான பெண்ணை சீரழித்த காக்கி.. நான் சொன்னால் எஸ்பியே கேட்பார்.. கன்னியாகுமரி ஏட்டு மிரட்டல்!
நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கன மழை காண சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உதகமண்டலத்தில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தடையானது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவு ஏற்பட்டு பெரும் விபத்து
பருவமழை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். நீலகிரி மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த மண் சரிவில் அரசு பேருந்து சிக்கி அதன் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார். நடத்துனர் மற்றும் பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது போன்ற அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவே ஊட்டி மலை ரயிலும் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் வருகிறது நவீன சூப்பர் சைக்கிள்.. ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்!