மதுரையில் சோக சம்பவம்.. வீட்டு முன் விளையாடிய சிறுவன் மாயம்.. மறுநாள் சடலமாக மீட்பு.. போலீசார் தீவிர விசாரணை!
Madurai Crime : மதுரை மாவட்டத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போன நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து அந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் உயிரிழந்த சிறுவன்.
மதுரை மாவட்டத்தில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதி தனியா மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் பெரிய கருப்பன் ( 42 வயது). இவரது மனைவி சத்யா. தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பெரிய கருப்பன் வெளிநாட்டில் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றார். சத்யா சொந்த கிராமத்திலேயே கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர்களது ஒரே மகன் முத்துவேல் ( 7 வயது). அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3- ஆம் வகுப்பு படித்து வந்தார்.
வீட்டில் விளையாடிய சிறுவன் திடீர் மாயம்
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவன் முத்துவேல் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவரது தாய் சத்தியா வழக்கம்போல காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், பணி முடிந்து பிற்பகலில் வீடு திரும்பினார். அப்போது, வழக்கம் போல வீட்டில் இருக்கும் அவரது மகனை காணாமல் சத்யா திடுக்கிட்டார். உடனே, அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகள் மற்றும் முத்துவேலுடன் விளையாடிய சிறுவனின் வீடுகளுக்கு நேரில் சென்று முத்துவேல் குறித்து கேட்டார்.
மேலும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் இருவர் உடல் கருகி பரிதாப இழப்பு..
காவல் நிலையத்தில் தாய் புகார்
ஆனால், அவர்கள் யாரும் சிறுவன் முத்து வேலை பார்க்கவில்லை என்று தெரிவித்து விட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த சத்தியா தனது உறவினர்களுடன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தோம் சிறுவன் முத்துவேலை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், இது தொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று சத்யா புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர். அத்துடன், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிறுவன் காணவில்லை என்ற தகவல் பரவியது.
பாழடைந்த வீட்டில் சிறுவன் சடலம் மீட்பு
இந்த நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்களுடன், தீயணைப்பு படை வீரர்களும், கிராம மக்களும் இணைந்து நீர்நிலைகள், புதர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், காணாமல் போன சிறுவன் முத்துவேல் இன்று திங்கள் கிழமை அதே பகுதியில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us