தென்காசியில் பிரைவேட் வாட்டர் பால்ஸ் க்ளோஸ்.. சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி.. என்ன காரணம்..!
Tenkasi Private Waterfalls Demolished : தென்காசி மாவட்டத்தில் தனியார் நீர் வீழ்ச்சிகள் மற்றும் தடுப்பணைகள் ஆகியவற்றை பொதுப் பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் புிகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதற்காக அதிக அளவு நீர் தேவை இருந்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து வரும் நீர் ஆதாரங்களான இயற்கை ஓடைகளை ஆக்கிரமித்து சிலர் தங்களின் சுய லாபத்துக்காக செயற்கையான தனியார் நீர்வீழ்ச்சிகள், தடுப்பணைகள் ஆகியவற்றை கட்டி உள்ளனர். இங்கு, குளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் ஒருவருக்கு ரூ. 100 முதல் ரூ. 500 வரை கட்டணமாக வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை நீர் ஆதாரங்களில் குறைவான தண்ணீரை வந்து கொண்டிருக்கிறது. இவற்றை தனியார் நீர்வீழ்ச்சிகள் மற்றும் தடுப்பணைகள் மூலமாக தடுத்து வைத்துள்ளனர். இதனால், விவசாயத்துக்கு போதிய நீர் ஆதாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்களும் கருகும் நிலை ஏற்பட்டது.
தனியார் நீர் வீழ்ச்சிகள்- தடுப்பணைகள் அகற்றம்
இந்த நிலையில் தான் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட துறையினரிடமும் தொடர்ச்சியாக புகார் மனுக்களை அளித்து வந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பவ இடத்துக்கு பொதுப் பணித்துறை, வருவாய் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் ஆக்கிரமிப்புகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நீர்நிலைகளை வழிமறித்து கட்டப்பட்டிருந்த தனியார் நீர்வீழ்ச்சி அமைப்புகள் மற்றும் கான்கிரீட் தடுப்பணைகள் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து அகற்றினர்.
மேலும் படிக்க: சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த ஆம்னி பேருந்து.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து!




போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்ற பணி
முன்னதாக, அந்த பகுதியில் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் பதற்றமான சூழலை தவிர்ப்பதற்காக அச்சங்குன்றம் போலீசார் பாதுகாப்புடன் இத்தகைய நடவடிக்கையை வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். விவசாயம் பாதிக்கப்படாத வகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் எடுத்த இந்த நடவடிக்கைக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். அடர்ந்த செடி, கொடிகள் படர்ந்து இருக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வரவழைப்பதற்காக சுட சுட மீன் வருவல் ஆகியவை தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.
சுற்றுலாப்பயணிகளை குறி வைத்து லாப வேட்டை
இதன் மூலம் மாதம் தோறும் தனியார் நீர் வீழ்ச்சி உரிமையாளர்கள் பல லட்சத்துக்கு வருவாய் ஈட்டி உள்ளனர். இதனால், குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் இல்லாத நிலையிலும், இந்த தனியார் நீர்வீழ்ச்சிகளில் குறைந்த அளவு தண்ணீர் விழும். இதனை, தடுக்கும் வகையில் இருந்த நீர் வீழ்ச்சிகளை தான் அதிகாரிகள் தற்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க: நெல்லை அருகே சம்பவம்.. கட்டிலில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி.. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்!