ஈரோட்டில் பாய்ந்து வந்த கருப்பு நிற கார்.. வழிமறித்த ஒற்றை காட்டு யானை.. நூலிழையில் உயிர் தப்பியவர்களின் திக் திக் நிமிடம்!
Erode Wild Elephant Attack Car : ஈரோடு மாவட்டத்தில் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கருப்பு நிற காரை ஒற்றை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக தாக்கியது. இதில், காரில் பயணித்தவர்கள் எந்தவித காயமும் இன்றி நூலிழையில் உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை மற்றும் ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இதனால், காட்டுப்பகுதிக்குள் இருக்கும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி தண்ணீர் தேடி காடுகளை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலைக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக- கர்நாடக எல்லை பகுதியான காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே காட்டு யானை ஒன்று வனப் பகுதிக்குள் இருந்து வெளியேறி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக கருப்பு நிற கார் ஒன்று கடந்து செல்ல முயன்றது. இந்த காரை பார்த்த அந்த ஒற்றை காட்டு யானை திடீரென பிழிறிக் கொண்டு ஆவேசத்துடன் காரை நோக்கி வேகமாக ஓடியது.
கருப்பு நிற காரை தாக்க முயன்ற காட்டு யானை
அப்போது, காரின் ஓட்டுநர் காரை வேகமாக இயக்க முயன்ற போது, அந்த யானை காரை வழி மறைத்து முன்னங்காலை தூக்கி காரின் மீது வைத்து தாக்க முயன்றது. இதனால், காரின் உள்ளே இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். உடனே, சுதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநர் உடனடியாக காரை பின்னோக்கி இயக்கினார். இதனால், காரின் உள்ளே இருந்த பயணிகள் எந்தவித அசம்பாவிதமும் இன்றி நூலிழையில் உயிர் பிழைத்தனர்.
மேலும் படிக்க: திருச்சியில் துணிகரம்.. வெளிமாநிலத்திலிருந்து ரூ.25 லட்சம் போதை இலை கடத்தல்.. மாணவர்களுக்கு குறி வைத்த 5 பேர்!




யானையை காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்
இந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்த்து ஷாக்- ஆன பிற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து தங்களது வாகனங்களை மேலும் இயக்காமல் சாலையில் ஆங்காங்கே நிறுத்திக் கொண்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். தொடர்ந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது. யானையின் இந்த திடீர் ஆக்ரோஷத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகன ஓட்டுகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
இதனை அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறிக்கும் இந்த யானை கரும்பு கட்டுகளை தூக்கி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது. தற்போது, சிறிய வாகனங்களை யானை தாக்க முயற்சிப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ராணிப்பேட்டையில் பழிக்கு பழி சம்பவம்… விசிக பிரமுகர் கொலையில் “திடுக்”.. கைதானவர்கள் பரபர வாக்குமூலம்!