நீலகிரியில் பரிதாபம்.. கார் மீது உருண்டு விழந்த ராட்சத பாறை.. மனைவி கண்முன்னே பறிபோன கணவன் உயிர்!
Nilgiris Rock fall One Died : நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக கார் மீது ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் ஒருவர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி உள்ளிட்டோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள அருவங்காடு ஜெகதளா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( 65 வயது) மற்றும் அவரது குடும்பத்தினர் கோயம்புத்தூரில் உள்ள தங்களது உறவினரை பார்ப்பதற்காக சொந்த காரில் சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களது கார் குன்னூர் அருகே உள்ள பர்லியார் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் உள்ள உயரமான மலையின் உச்சியில் இருந்து ஒரு பெரிய பாறை திடீரென உருண்டு வந்து காரின் மேல் பயங்கரமாக விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது.
கார் மீது ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து
இந்த விபத்தில் காரில் பயணித்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி தேவகி ( 54 வயது) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனே, அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் காரில் சிக்கிய இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் படிக்க: வெற்றி பயணத்தால் காலியாக ஓடும் பேருந்துகள்.. குடும்பத்தை எப்படி ஓட்டுவது? மனக்குமுறலை கொட்டிய ஓட்டுநர்!




மனைவி கண் முன்னே உயிரிழந்த கணவன்
ஆனால், சிகிச்சை பலன் இன்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி தேவகி மற்றும் காரில் பயணித்த மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்தால் மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, விபத்துக்குள்ளான கார், உருண்டு விழுந்த பாறை, மரம் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக மலைப்பாதைகளில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஈரோட்டில் பாய்ந்து வந்த கருப்பு நிற கார்.. வழிமறித்த ஒற்றை காட்டு யானை.. நூலிழையில் உயிர் தப்பியவர்களின் திக் திக் நிமிடம்!