வங்கி கணக்கில் எடுக்காமல் இருக்கும் பணம்.. ஆர்பிஐ அசத்தல் அம்சம்!
RBI UDGAM Portal Guide for Dormant Accounts | பலரும் வங்கி கணக்கை தொடங்கி அதில் இருக்கும் பணத்தை எடுக்காமல் அப்படியே வைத்திருப்பர். இந்த நிலையில் தான், எடுக்காமலே இருக்கும் பணத்தை எப்படி கண்டுபிடித்து எடுப்பது என்பது குறித்து ஆர்பிஐ வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வங்கிகளில் கணக்கு தொடங்கி நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்காமலே இருந்தால், அதனை எடுத்துக்கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. இந்த நிலையில், நீண்ட நாட்களாக எடுக்காமல் இருக்கும் பணத்தை எடுக்க வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இணையதள வசதியை அறிமுகம் செய்த ஆர்பிஐ
வங்கிகளில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பரிவர்த்தனை செய்யாமல், உரிமை கோரப்படாமல் இருக்கும் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புத் தொகைகள் இந்திய ரிசர்வ் வங்கியின் வைப்பாளார் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படுகின்றன. இத்தகைய கேட்பாரற்ற வைப்பு தொகைகள் ஏதேனும் உங்களுடைய பெயரில் உள்ளதா என்பதை அறிய UDGAM என்ற இணையதள வசதியையும் ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : திருமண பரிசுகளுக்கு வருமான வரி உண்டா?.. விதிகள் கூறுவது என்ன?
உங்கள் பெயரில் பணம் உள்ளதா? : தேடுவது எப்படி?
- முதலில் https://udgam.rbi.org.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் பதிவு செய்து உள்ளே நுழைய வேண்டும்.
- கணக்கு வைத்திருக்கும் நபரின் பெயர், வங்கியின் பெயர், பான் எண் உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி தேடலாம்.
- உங்கள் பெயரில் வைப்புத்தொகை இருப்பது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட வங்கியை அணுக வேண்டும்.
இதையும் படிங்க : வங்கி கடன் சுமையா?, வாய்ப்பா.. யார் யார் எப்படி பயன்படுத்துகின்றனர்.. ஒரு சின்ன வித்தியாசம் தான்!
பணத்தை திரும்ப பெறுவது எப்படி?
- கேட்பாரற்று வைப்புத்தொகை இருப்பது கண்டறியப்பட்டால், உரிய வங்கியின் கிளைக்குச் சென்று தேவையான ஆவணங்கள் மற்றும் கேஒய்சி விவரங்களை சமர்ப்பித்து பணத்தை கோரலாம்.
- உங்களது தகுதியை பொருத்து நீங்கள் வட்டியுடன் உங்களது பணத்தை பெறவும் வாய்ப்பு உள்ளது.
- UDGAM இணையதளம் வைப்புத்தொகையை தேடுவதற்கான வசதி மட்டுமே.
- பணத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கையை உரிய வங்கியிடம் மட்டுமே வழங்க முடியும்.
நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்னதாக வங்கி கணக்கு தொடங்கி, அந்த கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்காமலே வைத்திருந்தால் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள இந்த இணையதளம் மூலம் தெரிந்துக்கொண்டு, உங்களது வங்கிக்கு சென்று இருப்பில் இருக்கும் உங்களது பணத்துக்கு உரிமை கோரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.