வெற்றிப் பயணத்தால் விபரீதம்.. அதிரடி முடிவை கையில் எடுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்.. கொந்தளிப்பில் பயணிகள்!
Private Buses Ticket Fare Increased : தமிழகத்தில் வெற்றி பயணம் திட்டத்தால் பெண்கள் கூட்டம் குறைந்ததால் தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தை அதன் உரிமையாளர்கள் முன்னறிவிப்பு இன்றி கூட்டி உள்ளனர். டிக்கெட் கட்டணம் எவ்வளவு கூடியுள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் வெற்றி பயணம் என்ற திட்டத்தின் கீழ் புறநகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை அண்மையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்த நிலையில் ஏராளமான பெண்கள் தினந்தோறும் கட்டணம் இன்றி அரசின் இலவச பேருந்து பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர் ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதாவது, பெரும்பாலான பெண்கள் அரசின் இலவச பேருந்து பயணத்தை விரும்பும் நிலையில், தனியார் பேருந்துகளில் பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்த்து உள்ளனர். இதனால், போதிய வருமானம் இல்லாத நிலைக்கு தனியார் பேருந்துகள் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், இதனை ஈடு செய்வதற்காக தமிழகத்தின் சில இடங்களில் தனியார் பேருந்துகளில் உரிமையாளர்கள் திடீரென தன்னிச்சையாக பேருந்து டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி உள்ளனர்.
தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகளில் இந்த டிக்கெட் கட்டணம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு தனியார் பேருந்துகளில் முன்பு ரூ. 31 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 35 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல, சில மாவட்டங்களிலும் தனியார் பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




மேலும் படிக்க: “இது உங்க அப்பன் வீட்டு பஸ்சா” ஒகேப்பா செல்லக்குட்டி வீடியோ எடு.. சென்னை பேருந்தில் நள்ளிரவில் இளம்பெண் அட்ராசிட்டி!
பயணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
தனியார் பேருந்துகள் டிக்கெட் கட்டணம் உயர்வால் சில பெண்களும், பெரும்பாலான ஆண்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் விஜய் தொடங்கி வைத்த வெற்றி பயண திட்டத்திற்கு தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்திருந்தனர். ஆனால், அரசை பகைத்துக் கொள்ள முடியாது என்பதால் அந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அத்துடன், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தனியார் பேருந்து உரிமையாளர் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
த.வெ.க அரசின் வெற்றிப்பயணத் திட்டத்தால் காத்திருந்து அரசுப் பேருந்துகளில் பயணிக்க விரும்பும் பெண்கள்.. கவலையுடன் வீடியோ வெளியிட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்.!
#TVK #privateBus https://t.co/6KMx2oZqM6
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) October 6, 2026
வெற்றி பயண திட்டத்தை எதிர்த்த வழக்கு
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கும் உரிமையாளர் தமிழக முழுவதும் செயல்படுத்தப்பட்ட வெற்றிப் பயணத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் தான், தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் திடீரென டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதனிடையே, நாகப்பட்டினத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் தற்போதைய நிலை குறித்து வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வெற்றி பயணத்தால் காலியாக ஓடும் பேருந்துகள்.. குடும்பத்தை எப்படி ஓட்டுவது? மனக்குமுறலை கொட்டிய ஓட்டுநர்!