4 மாவட்டங்களில் தொடர் கொள்ளை.. நகை- பணத்தை திருடிய இருவர் கைது.. மடக்கி பிடித்த பாவூர்சத்திரம் போலீசார்!
Tenkasi Crime : திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை தென்காசி, பாவூர்சத்திரம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து பணம், பைக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வீடுகளில் நகை, பணத்தை திருடி வந்த இருவரை பாவூர்சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி, நேசமணி நகர் மற்றும் ராஜாக்கமங்கலம் பகுதிகளில் உள்ள வீடுகளில் இரவு நேரங்களில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருந்தனர். இது தொடர்பாக அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இதேபோல, விருதுநகர் மாவட்டம், டவுன் பகுதி, ராஜபாளையம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து மேற்கண்ட மர்ம நபர்கள் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி இருந்தனர். இது தொடர்பாக அந்தந்த மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
தென்காசியில் வீடுகளில் தொடர் கொள்ளை
இதே பாணியில், தென்காசி மாவட்டம், குற்றாலம் மற்றும் பாவூர்சத்திரம் பகுதிகளில் உள்ள வீடுகளில் இரவு நேரங்களில் வந்த மேற்கண்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை, பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றாலம் மற்றும் பாவூர்சத்திரம் காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில், இரு காவல் நிலையங்களிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் படிக்க: சீறி வந்த கனரக லாரி.. சக்கரத்தில் சிக்கிய ஸ்கூட்டர்.. தாய், 2 மகன்கள் ரத்த வெள்ளத்தில் பலி.. தஞ்சையில் சோகம்!
இருவரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார்
அத்துடன், கொள்ளை சம்பவம் நிகழ்ந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தனர். இதில், அந்த மர்ம நபர்கள் பாவூர்சத்திரம் பகுதியில் சுற்றித் திரிவது போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் வேல்கனி மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்ட போலீசார் மர்ம நபர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அதன்படி, அதிரடியாக சம்பவ இடத்துக்கு சென்ற அவர்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை அதிரடியாக இருவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ரூ.15 ஆயிரம்- 2 பைக்குகள் பறிமுதல்
அங்கு, அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் மதுரையை சேர்ந்த மணிகண்டன், மேலப்பாளையத்தை சேர்ந்த இமானுவேல் தாம்சன் பீட்டர் என்பதும் சுமார் 30 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் படிக்க: பயிரை மேய்ந்த வேலி! 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொல்லை.. ஆசிரியர் போக்சோவில் கைது.. ஈரோட்டில் பரபரப்பு!