அதிகாலையிலேயே சோகம்.. ஐயப்பனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த கோரம்.. விழுப்புரம் விபத்தில் இருவர் பலி!
Villupuram Two Ayyappa devotees Dies : விழுப்புரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் வேன் மீது தனியார் பேருந்து மோதிய கொடூர விபத்தில் இரு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதிய கோர விபத்தில் 2 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகின்றனர். அந்த வகையில், ஒரு பக்தர்கள் குழுவானது சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலைகள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் அதி வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதி கோர விபத்து நிகழ்ந்தது.
ஐயப்ப பக்தர்கள் வேன் மீது மோதிய தனியார் பேருந்து
இந்த விபத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், வேன் உருக்குலைந்த நிலையில், அதில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் பலரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். உடனே, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! மகளிர் ஆணையத்தின் 7 நாள் கெடு நிறைவு.. டிஜிபிக்கு கேள்வி எழுப்பிய NCW!
பலத்த காயமடைந்த 13 பக்தர்கள்- இருவர் பரிதாப பலி
இதில், பலத்த காயமடைந்த 13 ஐயப்ப பக்தர்களையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக விழுப்புரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இரு ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மற்ற 11 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த இரு ஐயப்ப பக்தர்களின் சடலங்களும் உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை
விபத்து நடந்த இடத்தில் சாலையின் நடுவே வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டிவனம் போலீசார் விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் வேனை மீட்டு போக்குவரத்தின் சீரமைத்தனர். அத்துடன், தனியார் பேருந்து ஓட்டுநர் இடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐயப்பன் கோவிலுக்கு சென்ற 2 பக்தர்கள் விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: “கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்.. தயவு செய்து யாராக இருந்தாலும்” செஞ்சி சிறுமியின் தாய் உருக்கமான வேண்டுகோள்!