“பிற மாநிலங்கள் தமிழ்நாட்டை கேலியாக பார்க்கின்றன.. தவெக சமூகத்திற்கே ஒரு நோய்”.. ஆறு மாத ஆட்சியை விளாசிய மு.க.ஸ்டாலின்!
MK Stalin Slams TVK Over Price Rise: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற குடியரசு இதழ் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், த.வெ.க. ஆட்சியில் ஆறு மாதங்களில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்றுவிட்டதாகவும், விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்தும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சென்னை, நவ.23: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ‘குடியரசு’ இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் சமூகத்திற்கே ஒரு நோய் எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த விழாவில் வெளியிடப்பட்ட நூலைப் பெரியாரியல் ஆய்வறிஞர் எஸ்.பி. ராஜதுரை பெற்றுக்கொண்ட நிலையில், தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், ஆறு மாத கால ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அரசியல் ரீதியாக மட்டுமின்றிச் சமூக ரீதியாகவும் இந்தப் போக்கு ஏற்படுத்தும் தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும், கொள்கைத் தளத்தில் நிலவும் முரண்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிக்க : கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது யார்? கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் விஜய் – வெளியான முக்கிய தகவல்
பெரியார், அம்பேத்கர், கல்வி வளர்ச்சி குறித்த கருத்து:
விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் பள்ளி கல்வியை வளர்த்தவர் காமராஜர் என்றும், உயர்கல்வியை வளர்த்தவர் கலைஞர் கருணாநிதி என்றும், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் தந்தை பெரியார் என்றும் குறிப்பிட்டார். பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறிக் கொள்பவர்கள் எந்தக் கூட்டத்திலும் அவரைப் பற்றிப் பேசுவதில்லை என விமர்சித்த அவர், மூடநம்பிக்கையில் மூழ்கியிருப்பவர்கள் பேஷனுக்காகப் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்களாகக் கூறிக்கொண்டு, அவர்களின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், இந்த ஆட்சிக்கு ஒரு கண்ணுக்குத் தெரியாத வழிகாட்டி இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
விலைவாசி உயர்வு மற்றும் தொழில் வளர்ச்சி விமர்சனம்:
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், விலைவாசி உயர்வு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை எனச் சாடினார். அரிசி மற்றும் காய்கறிகளின் விலையைக் கேட்டாலே பொதுமக்களுக்கு மயக்கம் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆறு மாத காலத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கூறினார். மேலும், புதிய தொழில்களை ஈர்க்க முடியாத சூழலால் பிற மாநிலங்கள் தமிழ்நாட்டைக் கேலியாகப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க : சீறி வந்த கனரக லாரி.. சக்கரத்தில் சிக்கிய ஸ்கூட்டி.. தாய், 2 மகன்கள் ரத்த வெள்ளத்தில் பலி.. தஞ்சையில் சோகம்!
அதிகாரிகளுக்கு தொல்லை மற்றும் பிரச்சார அழைப்பு:
அரசு உயரதிகாரிகளுக்குத் தொல்லை கொடுப்பதில் அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையேதான் போட்டி நடைபெற்று வருவதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். இந்த நிலைமை அரசியல் பிடி மட்டுமல்லாமல் சமூகப் பிடியாகவும் மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் ரீதியாகத் தாங்கள் போராடுவது போன்று, கொள்கை மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள் பிரச்சாரக் களத்தில் முன்னின்று நின்று இந்தத் தீமைகளை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.