கிச்சன் டூ நகர மாசு… இந்தியாவில் காற்று மாசுபாட்டின் மாறிவரும் முகம்!
வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுபாடு குறைந்திருந்தாலும், வெளிப்புற காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1990 முதல் 2019 வரையிலான ஆய்வுக் காலத்தில், வெளிப்புறக் காற்றில் உள்ள நுண்துகள்களால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 115.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், வெளிப்புற ஓசோன் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 139.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. ஒருகாலத்தில் வீடுகளுக்குள் சமையலுக்காக பயன்படுத்தப்பட்ட விறகு, சாணம் உள்ளிட்ட எரிபொருட்களால் ஏற்பட்ட புகை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதித்தது. ஆனால் இன்று சமையலறைகளில் அந்தப் புகை குறைந்திருந்தாலும், வெளியில் சுவாசிக்கும் காற்று புதிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது.
காற்று மாசுபாட்டால் 16.7 லட்சம் உயிரிழப்புகள்
The Lancet Planetary Health இதழில் வெளியான ஆய்வு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காற்று மாசுபாட்டின் தாக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வின்படி, 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய காரணங்களால் சுமார் 16.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது அந்த ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த மொத்த உயிரிழப்புகளில் 17.8 சதவீதமாகும். அதாவது, நாட்டில் பதிவான ஒவ்வொரு ஆறு உயிரிழப்புகளிலும் ஒன்று காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையதாக இருந்துள்ளது.
இந்த எண்ணிக்கைகள் நேரடியாக மரணச் சான்றிதழ்களில் பதிவான புள்ளிவிவரங்கள் அல்ல. பல்வேறு ஆய்வு மாதிரிகள் மற்றும் கணக்கீடுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டவை. இதுதவிர, காற்று மாசுபாட்டால் 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார உற்பத்தியில் சுமார் 36.8 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும், சுகாதாரச் செலவுகளுக்காக கூடுதலாக 12 பில்லியன் டாலர் செலவானதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
வீட்டுக்குள் காற்று மாசுபாடு குறைந்தது எப்படி?
காற்று மாசுபாட்டை முக்கியமாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. வெளிப்புற காற்று மாசுபாடு: வாகனப் புகை, தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசு, பயிர்க் கழிவுகள் எரிப்பு மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றால் ஏற்படுகிறது.
2. வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுபாடு: சமையலுக்காக விறகு, சாணம் மற்றும் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் உருவாகிறது.
இந்தியாவில் கடந்த 1990 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுபாட்டால் நிகழும் உயிரிழப்பு விகிதம் 64.2 சதவீதம் குறைந்துள்ளது.இதற்கு முக்கியக் காரணம், பல வீடுகளில் பாரம்பரிய எரிபொருட்களுக்குப் பதிலாக எல்பிஜி போன்ற தூய்மையான எரிபொருட்களின் பயன்பாடு அதிகரித்ததுதான். இதனால் சமையலறைகளில் பெண்களும் குழந்தைகளும் புகையைச் சுவாசிக்கும் நேரம் குறைந்துள்ளது.
இது இந்தியாவின் முக்கியமான சுகாதார முன்னேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வெளிப்புற காற்று மாசுபாடு இருமடங்காக அதிகரிப்பு!
வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுபாடு குறைந்திருந்தாலும், வெளிப்புற காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
1990 முதல் 2019 வரையிலான ஆய்வுக் காலத்தில், வெளிப்புறக் காற்றில் உள்ள நுண்துகள்களால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 115.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், வெளிப்புற ஓசோன் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 139.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதன் மூலம், வீட்டுக்குள் இருந்த காற்று மாசுபாட்டின் ஆபத்து குறைந்தாலும், வெளியில் சுவாசிக்கும் காற்று மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறியிருப்பது தெரியவந்துள்ளது.
காற்று மாசுபாட்டால் யாருக்கு அதிக பாதிப்பு?
காற்று மாசுபாடு அனைவரையும் பாதித்தாலும், சில தரப்பினருக்கு அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
– நாள் முழுவதும் சாலைகளில் பயணிக்கும் டெலிவரி ஊழியர்கள்.
– கட்டுமானத் தொழிலாளர்கள்.
– சாலையோர வியாபாரிகள்.
– வயதானவர்கள்.
– சிறு குழந்தைகள்.
பொருளாதார வசதி படைத்தவர்கள் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தி, ஜன்னல்களை மூடி வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால் சாலையோரத்தில் தேநீர் விற்பனை செய்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு அத்தகைய வாய்ப்புகள் இல்லை.
மேலும், காற்று மாசுபாடு என்பது டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமே காணப்படும் பிரச்சினை அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இதன் தாக்கம் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகிறது.
காற்று மாசுபாட்டை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்கிறோமா?
காற்று மாசுபாட்டின் மற்றொரு முக்கியமான பிரச்சினை, அதை மக்கள் இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருப்பதுதான்.
நவம்பர் மாதங்களில் வானம் புகைமூட்டத்துடன் காணப்படுவதையும், குழந்தைகள் காலையில் இருமுவதையும் பலரும் பருவநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். ஆனால் அந்த இருமலுக்குப் பின்னால் காற்று மாசுபாட்டின் தாக்கம் இருக்கலாம் என்பதைப் பலர் உணர்வதில்லை.
ஒருகாலத்தில் சமையலறைகளில் ஏற்பட்ட புகை பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதித்தது. அந்தப் பிரச்சினையை உணர்ந்து தூய்மையான சமையல் எரிபொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியதால் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.ஆனால் தற்போது வீதிகள் முழுவதும் பரவியுள்ள காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் சமையலறைகளில் இருந்த புகையை இந்தியா அகற்றியது. இப்போது வீதிகளில் பரவியிருக்கும் புகையை அகற்றுவது யார்?