வரி சலுகைகளை மட்டும் பெற்றுக்கொண்டு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தவில்லையா? கார்ப்பரேட் நிறுவனங்களை கடுமையாகச் சாடிய பிரதமர் மோடி!
PM Modi Slams Corporate: இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களின் உண்மையான ஊதிய வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால் 2017-18 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் வழக்கமான சம்பளப் பணியாளர்களின் சராசரி மாத வருமானம் ஆண்களுக்கு 6.4 சதவீதமும், பெண்களுக்கு 12.5 சதவீதமும் குறைந்துள்ளது.
நவம்பர் 21, 2026: இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கிய போதிலும், அதற்கேற்ப ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நிறுவனங்கள் முன்வரவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு வழங்கும் சலுகைகளின் பலன்களை நிறுவனங்கள் மட்டுமே அனுபவிப்பதாகவும், அதன் பயன்கள் தொழிலாளர்களைச் சென்றடையவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) அமைப்பின் 100-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தொழில்துறை நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
வரி குறைத்தும் சம்பளத்தை உயர்த்தாத நிறுவனங்கள்
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு 30 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரியை 2019ஆம் ஆண்டு 22 சதவீதமாக மத்திய அரசு குறைத்ததாகக் குறிப்பிட்டார். மேலும், தனிநபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். ஆனால், இதற்குப் பதிலாக நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளனவா, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனவா என கேள்வி எழுப்பினார்.
மேலும், “நீங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினீர்களா? வேலைக்கு அமர்த்தும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்தீர்களா? இல்லை. மோடி ஜி, நீங்கள் செய்யுங்கள்; நாங்கள் வேடிக்கை மட்டும் பார்க்கிறோம் என்பதுதான் உங்கள் அணுகுமுறையாக இருக்கிறது. இப்படியே தொடர வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: “சீசன் தொடங்கியும் சபரிமலையில் பாதிக்குப் பாதி குறைந்த பக்தர்கள் கூட்டம்!”.. ஆன்லைன் புக்கிங்கில் முறைகேடா?.. விசாரணைக்கு உத்தரவு!
நிறுவனங்களின் பேராசையை விமர்சித்த அவர், “உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் உங்கள் பசி அடங்குவதில்லை என்பது எனக்குத் தெரியும். இதற்காக நீங்கள் கைதட்ட மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்” எனக் கிண்டலாகப் பேசினார்.
நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு; ஊழியர்களின் ஊதியம் சரிவு
இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களின் உண்மையான ஊதிய வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால் 2017-18 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் வழக்கமான சம்பளப் பணியாளர்களின் சராசரி மாத வருமானம் ஆண்களுக்கு 6.4 சதவீதமும், பெண்களுக்கு 12.5 சதவீதமும் குறைந்துள்ளது.
மேலும் படிக்க: உயிருக்கு போராடிய குட்டி யானைக்கு வன்தாராவில் சிகிச்சை! ஆனந்த் அம்பானிக்கு அசாம் முதல்வர் பாராட்டு
இதற்கிடையே, வருமான வரி வசூல் கார்ப்பரேட் வரி வசூலைவிட அதிகரித்துள்ளதும் கவனம் பெற்றுள்ளது. 2023-24 நிதியாண்டில் தனிநபர் வருமான வரி மற்றும் பங்குப் பரிவர்த்தனை வரி வசூல் ரூ.10.45 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கார்ப்பரேட் வரி வசூல் ரூ.9.11 லட்சம் கோடியாக இருந்தது.
வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்
அரசு தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகளையும் வரிச்சலுகைகளையும் வழங்கி வருவதாகவும், அதற்குப் பதிலாக நிறுவனங்கள் முதலீடுகளை அதிகரித்து உற்பத்தித் திறனை விரிவுபடுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார்.
இந்தச் சூழலில், நிறுவனங்களின் லாப வளர்ச்சி மட்டுமின்றி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருப்பது தொழில்துறை வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.