காதல் திருமணம் செய்த 6 மாதங்களில் இளம்பெண் மரணம்.. வரதட்சணை தொல்லையா?.. கொந்தளிக்கும் உறவினர்கள்!!
Young Woman Dies 6 Months After Love Marriage: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே காதல் திருமணம் செய்த 6 மாதங்களில் இளம்பெண் ஆர்த்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டுத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், இது கொலை என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்; உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம், நவ.21: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஆறு மாதங்களிலேயே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாபாத் உள்ளாவூர் பகுதியைச் சேர்ந்த ஆர்த்திக்கும், தமனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய்க்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காகச் செலவு செய்த ரூ.5 லட்சம் தொகையை வரதட்சணையாகக் கேட்டுக் கணவரின் தாய் மற்றும் சகோதரர்கள் ஆர்த்தியிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகப் பல நாட்கள் தாய் வீட்டிலேயே வசித்து வந்த ஆர்த்தி, தீபாவளிக்கு முன்பு சமரசம் பேசப்பட்டதைத் தொடர்ந்து கணவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன்பிறகும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராணிப்பேட்டை பெண் கொலை வழக்கில் திடுக் திருப்பம்.. நகைக்காக பெற்ற தாயை மகளே கொன்றது அம்பலம்!!
மருத்துவமனையில் உயிரிழப்பு, குற்றச்சாட்டு:
இதனிடையே, ஆர்த்தி வீட்டில் மயங்கி விழுந்து கிடந்ததாகக் கூறி அவரை வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆர்த்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் வெளியானதை அடுத்து, ஆர்த்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், இது தற்கொலை அல்ல கொலை எனக் குற்றம் சாட்டி உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உறவினர்களைக் கைது செய்யக் கோரிக்கை:
வரதட்சணைத் தொல்லை மற்றும் தொடர் தகராறுகளுக்கு இடையே இளம்பெண் உயிரிழந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய பெண்ணின் உறவினர்கள், இந்த விவகாரத்தில் தொடர்புடைய கணவரின் உறவினர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். மரணத்திற்கான காரணம் குறித்து வெளிப்படையான மற்றும் தீவிரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் கோரிக்கையாக முன்வைத்தனர்.
இதையும் படிக்க : முதலீடுகளை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி – ஆந்திராவுக்கு முதலீட்டு தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு – கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்
மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைப்பு:
உறவினர்களின் போராட்டம் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தி ஆர்த்தியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் புகாரின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இது தற்கொலை அல்ல கொலை என்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.