கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு.. மத்திய மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
Central Medical Team Inspects Bird Flu-Hit Areas: கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், டெல்லி மற்றும் ஜிப்மரில் இருந்து வந்த மத்திய மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கட்டியாங்குப்பம் கோழிப் பண்ணைகள், கோழிகள் புதைக்கப்பட்ட இடங்கள் மற்றும் பொதுமக்களுக்கான நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்துக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடலூர், நவ.21: கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய மருத்துவக் குழுவினர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகப் பல்வேறு பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் கோழிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து லட்சக்கணக்கான கோழிகள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன. இந்தச் சூழலில், பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் சென்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் (NCDC) மற்றும் ஜிப்மர் (JIPMER) ஆகியவற்றிலிருந்து வந்த மத்திய மருத்துவர்கள் கொண்ட குழுவினர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : முதலீடுகளை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி – ஆந்திராவுக்கு முதலீட்டு தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு – கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்
கோழிப் பண்ணைகள், பாதுகாப்பு விவரங்கள் ஆய்வு:
குறிப்பாகக் கடலூர் மாவட்டம் கட்டியாங்குப்பம் பகுதியில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணைகள் மற்றும் அப்பகுதியில் மனிதர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கோழிப் பண்ணைகளில் கோழிகள் உயிரிழந்த பிறகு அந்தப் பண்ணைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன, கோழிகள் புதைக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் மருத்துவர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.
மக்களுக்கான நோய் தடுப்பு, பரிசோதனைகள்:
பாதிக்கப்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எந்த மாதிரியான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஏதேனும் நோய் தாக்கம் உள்ளதா என்பது குறித்தும் மத்திய மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மனிதர்களுக்கு நோய் பரவலைத் தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின் செயல்பாடுகளை அவர்கள் விரிவாகப் பார்வையிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ராணிப்பேட்டை பெண் கொலை வழக்கில் திடுக் திருப்பம்.. நகைக்காக பெற்ற தாயை மகளே கொன்றது அம்பலம்!!
மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஆய்வுத் திட்டம்:
கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் குழுவினர் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகின்றனர். கடலூர் மாவட்டப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் மத்திய மருத்துவக் குழுவினர் நேரில் செல்ல உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணைகள், கோழிகள் இறந்த பிறகு பண்ணை பாதுகாக்கப்படும் விதம், கோழிகள் புதைக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்துக் குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.