ராணிப்பேட்டை பெண் கொலை வழக்கில் திடுக் திருப்பம்.. நகைக்காக பெற்ற தாயை மகளே கொன்றது அம்பலம்!!
Ranipet Woman Murder Twist: ராணிப்பேட்டையில் 54 வயது பெண் கீதா கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மகள் சரண்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். 30 சவரன் நகை அடகு வைக்கத் தாய் மறுத்த வாக்குவாதத்தில் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து, 10 சவரன் நகை மற்றும் ரூ.10,000 பணத்தை எடுத்துத் திருட்டு நடந்ததாகச் சித்தரித்த நாடகம் விசாரணையில் அம்பலமானது.
நவம்பர், 21: ராணிப்பேட்டை மாவட்டம் தென்கட பகுதியைச் சேர்ந்த கீதா (54) என்ற பெண் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக காணப்பட்டார். வடமாநில கொள்ளையர்களால் இந்த கொலை நடந்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கீதாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில், விவாகரத்து பெற்ற மூத்த மகளான சரண்யா தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருவதோடு, தனது இரண்டு மகன்களுடன் தாயுடனே வசித்து வந்தார். கீதா கொலை செய்யப்பட்ட போது அவரது கழுத்திலிருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் வீட்டிலிருந்த ரூ.10,000 ரொக்கப் பணம் திருடு போயிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக மகள் சரண்யா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : முதலீடுகளை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி – ஆந்திராவுக்கு முதலீட்டு தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு – கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்
30 சவரன் நகைக்காக எழுந்த வாக்குவாதம்:
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சரண்யா வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்து வந்ததாகவும், அவ்வப்போது நகைகளை வாங்கி அடகு வைத்தும் விற்பனை செய்தும் செலவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் செலவுப் பழக்கத்தால் தாய் கீதா அவ்வப்போது சரண்யாவைக் கண்டித்து வந்துள்ளார். கீதா கொலை செய்யப்பட்ட அன்று, சரண்யா 30 சவரன் தங்க நகையை அடகு வைப்பதற்காகக் கேட்டதாகவும், அதற்குத் தாய் கீதா மறுப்புத் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்படை விசாரணையில் அம்பலம்:
தாயுடனான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரண்யா, வீட்டிலிருந்த கயிறு ஒன்றை எடுத்துத் தாய் கீதாவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கீதாவின் கழுத்திலிருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் பீரோவிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, வீட்டில் திருட்டு நடைபெற்றது போலச் சித்தரித்துவிட்டுப் பள்ளிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். மாலையில் கீதா கொலை செய்யப்பட்ட விவரம் அறிந்து வீட்டிற்கு வந்து அழுவது போல் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, சரண்யாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க: ரூ.700 கோடி ஹெராயின் பறிமுதல்! ஐஸ்கிரீம் வியாபாரிக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. வெளிவந்த பகீர் தகவல்!
கொலை ஒப்புதல், பிற கோணங்களில் விசாரணை:
போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், தாய் கீதாவைக் கொலை செய்ததை சரண்யா ஒப்புக்கொண்டதை அடுத்து அவரைக் கைது செய்தனர். நகை மற்றும் பணம் திருடு போனதாகக் காட்டப்பட்ட நாடகத்தின் பின்னணியும், கொலைச் சம்பவத்தின் விவரங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தக் கொலைச் சம்பவத்தில் சரண்யாவுக்கு வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.