அரசியலில் குதிக்கிறாரா திரிஷா? இளைய புரட்சித் தலைவி பெயரில் பேரவை- லோகோ வெளியீடு!
Tirunelveli Trisha Forum Launched : நடிகை திரிஷா பெயரில் இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை என்ற பெயரில் புதிய பேரவை தொடங்கி அதற்கான லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அவர் அரசியலுக்கு எண்ட்ரி கொடுக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் பிரபல நடிகை திரிஷாவுக்கு புதிய பேரவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்று பெயரிடப்பட்டு பேரவைக்கான லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பேரவையானது திருநெல்வேலியில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என அந்தப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். அத்துடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று ஆளுமை நிறைந்தவர் திரிஷா என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவைக்கான லோகோவை அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் வெளியிட்டு அறிமுகம் செய்து வைத்தார்.
இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை
இந்த லோகோவில் பச்சை நிற புடவையில் நடிகை திரிஷா இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவிப்பது போல புகைப்படம் உங்களது. அதற்கு கீழே “பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!! இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகை திரிஷாவுக்கு ஏற்கனவே ரசிகர் மன்றங்கள் இருக்கும் நிலையில், தற்போது, இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்று புதிதாக பேரவை தொடங்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியலில் பேசும் பொருளாகி உள்ளது. நடிகை திரிஷா விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாகவும், அவருக்கு எம்எல்ஏ அல்லது பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும் படிக்க: 4 மாவட்டங்களில் தொடர் கொள்ளை.. நகை- பணத்தை திருடிய இருவர் கைது.. மடக்கி பிடித்த பாவூர்சத்திரம் போலீசார்!
இடைத்தேர்தலில் நடிகை திரிஷா போட்டியிடுகிறாரா
இதனிடையே, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் இரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்- அமைச்சருமான ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவிய ராஜினாமா செய்திருந்தார். அப்போது, அந்தத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகை திரிஷா போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன் மூலம், தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகை திரிஷா இணைய இருப்பதாகவும். அதன் மூலம், அரசியலில் தடம் பதிக்க இருப்பதாகவும் பேசப்பட்டு வந்தது.
முதல்வர் ஆவதாக ஆசை தெரிவித்த நடிகை திரிஷா
இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ந்த நேர்காணல் நிகழ்ச்சியின் போது, தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு நான் முதல்வராக ஆசை படுவதாக நடிகை திரிஷா தெரிவித்திருந்தார். அது தொடர்பான வீடியோ காட்சிகள் அண்மையில் வைரலாக பரவி வந்தது. அத்துடன், நடிகை திரிஷா எப்போது வேண்டுமானாலும் அரசியலில் வரலாம் எனவும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகை திரிஷா பெயரில், அதுவும் இளைய புரட்சித்தலைவி என்ற பெயரில் அவருக்கு பேரவை தொடங்கி இருப்பது அரசியல் நகர்வாக இருக்குமோ என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், திரிஷா தரப்பிலிருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க: பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! மகளிர் ஆணையத்தின் 7 நாள் கெடு நிறைவு.. டிஜிபிக்கு கேள்வி எழுப்பிய NCW!