“ஜனநாயகக் குரலை நசுக்கும் செயல்!”.. ராகுல் காந்தி கைதை எதிர்த்து தவெக கடும் கண்டனம்!!
TVK Condemns Rahul Gandhi Arrest: டெல்லியில் எஸ்.ஐ.ஆர் நடைமுறை மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராடி ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனநாயகக் குரலை நசுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை ஆட்சேபகரமானது என்றும், தவெக தரப்பில் அதிரடி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, அக்.08: இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடைமுறையான எஸ்.ஐ.ஆர் முறைகேடுகள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாகச் சென்று எம்.பி.க்களுடன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய எதிர்கட்சித் தலைவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்ததற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகமும் இச்சம்பவத்திற்கு எதிராகக் காட்டமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் விதிமுறைகள் தளர்வு – வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு பெண்களின் குழந்தைகளுக்கும் பயன்..
டெல்லியில் ராகுல் காந்தி கைது பின்னணி:
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது.
SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
— TVK Party HQ (@TVKPartyHQ) October 7, 2026
தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடைமுறைகள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் பேருந்தில் புறப்பட்டுப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது டெல்லி காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகப் பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்று கைது செய்தனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தவெகவின் உறுதியான நிலைப்பாடு:
ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எஸ்.ஐ.ஆர் (SIR) நடைமுறையை எதிர்த்தது; இப்போதும் அதே உறுதியான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கிறது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முறையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடக்கம் முதலே குரல் கொடுத்து வரும் தவெக, ராகுல் காந்தி முன்னெடுத்த இப்போராட்டத்திற்குத் தன் ஆதரவுக் குரலைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: வண்டலூர் பூங்கா செல்ல பிளான் இருக்கா? 20 நாட்களுக்கு சபாரி சேவை நிறுத்தம்.. காரணம் என்ன?
கைது நடவடிக்கைக்கு தவெக கடும் கண்டனம்:
தொடர்ந்து அறிக்கையில் பேசிய தவெக, “எஸ்.ஐ.ஆர் நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட விதம் மிகவும் ஆட்சேபகரமானது” எனச் சாடியுள்ளது. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் தலைவர்களின் குரலை நசுக்கும் நோக்கில் இத்தகைய அணுகுமுறைகள் இருக்கக்கூடாது எனவும் தவெக தனது கண்டனத்தில் வலியுறுத்தியுள்ளது.