தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் விதிமுறைகள் தளர்வு – வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு பெண்களின் குழந்தைகளுக்கும் பயன்..
Thaimaman Gold Ring Scheme: புதிய வழிகாட்டுதலின்படி, குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணத்திற்குப் பிறகு வெளிமாநிலத்தில் வசித்து வந்தாலும், அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவண ஆதாரங்களை சமர்ப்பித்தால், அந்த குழந்தைக்கும் இத்திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
அக்டோபர் 7, 2026: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில்” விதிமுறைகளை தளர்த்தி தமிழ்நாடு அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் பிறந்து திருமணத்திற்குப் பிறகு வெளிமாநிலத்தில் வசித்து வரும் பெண்கள், பிரசவத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்து அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தாலும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களின் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்:
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக கடந்த ஜூன் 23ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க: வண்டலூர் பூங்கா செல்ல பிளான் இருக்கா? 20 நாட்களுக்கு சபாரி சேவை நிறுத்தம்.. காரணம் என்ன?
அதன்படி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
விதிமுறைகளில் தளர்வுகள்:
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் திருமணத்திற்குப் பிறகு வேறு மாநிலங்களில் வசித்து வந்தாலும், பிரசவத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள தங்களது பெற்றோர் வீட்டிற்கு வந்து அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுக்கும் நிகழ்வுகள் அரசின் கவனத்திற்கு வந்தன.
இதனை கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின் விதிமுறைகளை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி, குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணத்திற்குப் பிறகு வெளிமாநிலத்தில் வசித்து வந்தாலும், அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவண ஆதாரங்களை சமர்ப்பித்தால், அந்த குழந்தைக்கும் இத்திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
மேலும் படிக்க: செங்கல்பட்டில் 14-வது டிஎஸ்பி பயிற்சி நிறைவு விழா: சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கம் அணிவித்த முதல்வர் விஜய்..
உமா மகேஸ்வரியின் குழந்தைக்கு மோதிரம்:
இதற்கு உதாரணமாக, கர்நாடகா மாநிலம் மைசூரில் வசித்து வரும் உமா மகேஸ்வரி, பிரசவத்திற்காக தனது பெற்றோர் வசிக்கும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்தார்.
புதிய விதிமுறை தளர்வின் அடிப்படையில், அவரது குழந்தைக்கு அக்டோபர் 7ஆம் தேதி ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. மேலும், இந்த திருத்தப்பட்ட விதிமுறை கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.