தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதம்.. உளவுத்துறை தோல்விக்கு முதல்வர் தான் பொறுப்பு.. நயினார் அதிரடி கருத்து!
Nainar Nagendran Latest Speech : தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக அரசை பாஜ க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார் .
தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தவெக அரசும், முதல்வரும் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூரில் என். ஐ. ஏ. அமைப்பினர் கைது செய்த 7 பேருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஷாசாத் பட்டி நெட்வொர்க் உடன் நேரடி தொடர்பு இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாத சக்திகளும், சமூக விரோத கும்பல்களும் தமிழகத்துக்குள் பெருமளவில் ஊடுருவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருவது, தமிழக உளவுத்துறை மற்றும் காவல் துறை முற்றிலும் செயலிழந்து விட்டதையே காண்பிக்கிறது. குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கப்பட்டதும், முக்கிய வழிபாட்டு தலங்களை குறிவைத்து நாச வேலைகளுக்கு திட்டமிட்டு உழவு பார்த்ததும் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்து உள்ளது என்பதை அப்பட்டமாக காண்பிக்கிறது.
பாதுகாப்பு கேள்வி குறித்து முதல்வர் பொறுப்பேற்கனும்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல் அமைச்சர் ஜோசப் விஜய், இந்த ஒட்டுமொத்த பாதுகாப்பு தோல்விக்கும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். தனது கையில் அதிகாரம் இருந்தும் இத்தகைய அபாயகரமான ஊடுருவல்களை தடுக்க தவறிய தமிழக வெற்றிக் கழக அரசின் மெத்தன போக்கிற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழக மக்களின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். என். ஐ. ஏ. அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தேச விரோத சக்திகள் மீது இரும்புக்கரம் கொண்டு உடனடியாக அடக்க வேண்டும்.
மேலும் படிக்க: திருத்தணியில் கொடூரம்.. தியேட்டர் ஊழியரை திட்டமிட்டு தீர்த்துக் கட்டிய சிறுவர்கள்.. கொலைக்கான காரணம் குறித்து பகீர் வாக்குமூலம்!




7 பேர் கைது செய்யப்பட்டதன் பின்னணி
அதற்கான நடவடிக்கைகளை கடுமையான முறையில் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மற்றும் கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்திருந்தனர். இவர்களின் வீடுகளில் இருந்து செல்போன்கள், மடிக்கணினிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
தமிழக இளைஞர்களுக்கு மூலைச்சலவை
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானை சேர்ந்த ஷாசாத் பட்டி என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது இவர்கள் ஆன்லைன் மூலமாகவும், ரகசிய இடங்களில் இளைஞர்களை தொடர்பு கொண்டு மூளைச்சலவை செய்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தயார்படுத்தியதுடன், அவர்களுக்கு தேவையான பண உதவிகளை செய்ததும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு.. ரகசிய கண்காணிப்பில் சிக்கிய இருவர்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி போலீசார்!