சுங்கத்துறையிடம் சிக்கிய லேண்ட் க்ருசர்.. ஆதவ் அர்ஜூனா நிறுவனத்திடம் ரூ.2.60 கோடி மோசடி.. சிக்கிய கர்நாடக இடைத்தரகர்!
Aadhav Arjuna Voice Of Common Company : அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தில் ரூ. 2.60 கோடி மோசடி செய்த புகாரில் கர்நாட மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கடந்த 2024- ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ஒரு ஏஜென்சி மூலமாக ரூ. 2.60 கோடி மதிப்பிலான லேண்ட் க்ரூசர் கார் வாங்குவதற்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து அந்த கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் மும்பை துறைமுகத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் காரின் உண்மையான மதிப்பை விட குறைவான மதிப்பில் வாங்கியதாக ரூ. 65 லட்சம் அபராதம் விதித்ததாக தெரிகிறது. இந்த தொகை செலுத்துவது தொடர்பாக ஹைதராபாத் தனியார் ஏஜென்சிக்கும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தனியார் ஏஜென்சி மீது வாய்ஸ் ஆப் காமன் தரப்பில் புகார்
ஏற்கனவே, அந்த காருக்கு ரூ. 2.60 கோடி வழங்கப்பட்ட நிலையில் சுங்க அதிகாரிகள் விதித்த ரூ. 65 லட்சம் அபராதத்தை அந்த ஏஜென்சியே செலுத்தி காரை ஒப்படைக்க வேண்டும் என்று வாய்ஸ் ஆப் காமன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக அந்த ஏஜென்சி நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் கார் வாங்கி கொடுக்காமல் ரூ. 2.60 கோடி மோசடி செய்ததாக அந்த ஏஜென்சி மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: வெற்றிப் பயணத்தால் விபரீதம்.. அதிரடி முடிவை கையில் எடுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்.. கொந்தளிப்பில் பயணிகள்!




கர்நாடகாவை சேர்ந்த இடைத்தரகர் கைது
இதில், லேண்ட் க்ரூசர் காரை வாங்கி தருவதற்கு இடைத்தரகராக செயல்பட்ட கர்நாடக மாநிலம், மங்களூருவை சேர்ந்த அனுப் ஸ்மித் ( 37 வயது) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சுமார் 1.5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகவும், அந்த காரை மும்பையில் சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி ரூ. 65 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
கைதான இடைத்தரகர் சிறையில் அடைப்பு
அந்த தொகையை செலுத்துமாறு சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அனுப் ஸ்மித்தை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும், இந்த மோசடி சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: “எங்களை தொந்தரவு பண்ணான்.. அதான் போட்டோம்” மயிலாப்பூர் ஏசி மெக்கானிக் கொலையில் பரபரப்பு வாக்குமூலம்!