வீடு வாடகைக்கு கேட்பது போல டிராமா.. மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு.. தப்பியோடி கில்லாடி பெண் கைது!
Trichy Gold Jewelry Stealing : திருச்சி மாவட்டத்தில் வீடு வாடகைக்கு தேடுவது போல நடித்து மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற இளம் பெண்ணை லால்குடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பறிக்கப்பட்ட நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வசந்தம் நகர் பகுதியில் முதிய தம்பதி தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு கடந்த அக்டோபர் 6- ஆம் தேதி இளம் பெண் ஒருவர் வந்து நிலையில், தான் குடியிருப்பதற்கு வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு, அந்த முதிய தம்பதியும் பதில் அளித்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த இளம் பெண் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியே பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இதனை எதிர்பாராத அந்த தம்பதி கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அந்த இளம் பெண்ணை பிடிக்க முயன்றும், அவர்களால் பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக முக்கிய தம்பதி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கண்காணிப்பு கேமரா அடிப்படையில் விசாரணை
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அத்துடன், மூதாட்டி வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம பெண் குறித்தும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதில், கண்காணிப்பு கேமராவில் அந்தப் பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது. அத்துடன், அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் நகை பறித்த பெண்ணின் அடையாளங்கள் மூலம் தனிப்படை போலீசார் துப்பு துலக்கினர்.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு.. ரகசிய கண்காணிப்பில் சிக்கிய இருவர்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி போலீசார்!




இளம் பெண்ணை கைது செய்த தனிப்படை போலீசார்
இதில், அந்தப் பெண் லால்குடி அருகே உள்ள மேலவாளை பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி ( 23 வயது) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மூதாட்டியிடம் இருந்து பறிக்கப்பட்ட 7 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் தொடர் விசாரணை
அத்துடன் வேறு எங்கேயும் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த 22 மணி நேரத்துக்குள் போலீசார் நடவடிக்கை எடுத்ததற்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் இளம் பெண் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நீலகிரியில் பரிதாபம்.. கார் மீது உருண்டு விழந்த ராட்சத பாறை.. மனைவி கண்முன்னே பறிபோன கணவன் உயிர்!